முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
28

ஏத

ஏத்த, அதனாலே உன்னுடைய வேறுபாடு தோன்ற இருந்தாய் என்றால் இது உனக்கு ஆச்சரியமோ! அதாவது, ஒருவன் ஒரு 1குழமணனைச் செய்து அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று, 2’நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே, உன்னாலே மனையப்பட்ட பிரமனும், அவனாலே உண்டாக்கப்பட்ட இவர்களும் உன்னையேத்த, அதனாலே இறுமாந்திருந்தாயென்றால் அது உனக்கு ஏற்றமோ! நகையாய் முடியுமத்தனையன்றோ!’ என்றபடி.

(10)

233

வியப்புஆய வியப்புஇல்லா
    மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப்புகழார் பலர்வாழும்
    தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்குஇன்றித் தொழுதுஉரைத்த
    ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்
    ஒலிமுந்நீர் ஞாலத்தே.

    பொ-ரை : பிறரிடத்தில் ஆச்சரியப்படத் தக்கனவான காரியங்களனைத்தும் இயல்பாய் அமைந்துள்ள, உண்மை ஞானத்தைக் கூறுகின்ற வேதங்களால் சொல்லப்படுகின்றவனை, வெற்றிப் புகழையுடைய பெரியார் பலர் வாழ்கின்ற விசாலமான திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் ஐயம் திரிபுகள் இன்றி வணங்கியுரைத்த ஆயிரந்திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களும் ஒலிக்கின்ற கடலாற்சூழப்பட்ட இப்பூமியில் உய்வு பெறச்செய்து பிறப்பினை நீக்கும்.

    வி-கு : வியப்பாய - வினையாலணையும் பெயர். இல்லாத வேதியன் என்க. சமயம் - ஞானவெற்றி.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழிதானே இது கற்றாரை உய்வு பெறச்செய்து, பின்னர் இவ்வுலகத்திலுண்டாகும் எல்லாத் தீவினைகளையும் போக்கும்,’ என்கிறார்.

____________________________________________________

1. குழமணன் - மரப்பாச்சி; ‘குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை
  செய்து கன்மமொன் றில்லை.” (திருவாய். 6. 2 : 6)

2. திருவாய். 7. 5 : 4.