முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
287

கெ

கொடுத்தது. இனி, ‘வஞ்சனையையுடையவனே! என்னலுமாம். ஈண்டு வஞ்சனையாவது, கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து, சிறுகாலைக் காட்டி ‘மூவடி’ என்று வேண்டிப் பெரிய காலாலே அளந்து, இரண்டு அடியிலே அடக்கி, ஓரடிக்குச் சிறையிலே இட்டு வைத்தது. இந்திரன் பேறு தன் பேறு ஆகையாலே, 1கொள்வான்’ என்கிறது. என்னும் என் வாசகமே - என் வாக்கானது இவ்வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ்வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு 2இராமாவதாரத்தின் செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார். ‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற்செய்த இடம் அன்றோ இராமாவதாரம்? தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் - 3கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.

(2)

302

        வாசகமே ஏத்த அருள்செயும் வானவர்தம்
        நாயகனே! நான்இளந் திங்களைக் கோள்விடுத்து
        வேய்அகம்பால் வெண்ணெய் தொடுவுண்ட ஆன்ஆயர்
        தாயவனே! என்று தடவும்என் கைகளே.

   
பொ-ரை : என்னுடைய கைகளானவை, ‘வாசகமே ஏத்தும்படி திருவருளைச் செய்த, வானவர்களுக்குத் தலைவனே! நாளால் இளைய சந்திரனைப் போன்று இருக்கின்ற பற்களினின்றும் ஒளியை வெளிப்படுத்தி, மூங்கிலால் கட்டப்பட்ட குடிலில் உள்ள பாலையும் வெண்ணெயையும் களவு செய்து உண்ட, ஆயர்களுக்குத் தாய்போன்றவனே!’ என்று கூறிக்கொண்டே தடவாநின்றன.

    வி-கு : ‘அருள் செய்யும் நாயகன்’ என்றும், ‘உண்ட தாயவன்’ என்றும் கூட்டுக. ‘விடுத்து உண்ட’ என்க. திங்கள்-பற்கள்; ஆகுபெயர். வேய் - மூங்கில்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. ‘கைகளானவை வாக்கின் தொழிலையும் தன் தொழிலையும் ஆசைப்படாநின்றன’ என்கிறார்.

____________________________________________________

1. ‘கொள்வான் என்கிறது’ என்றது, ஞாலத்தை இந்திரனுக்குக்
  கொடுப்பதற்காக என்று கூறாமல், ‘கொள்வான்’ என்றதனாலே என்றபடி.

2. ‘இராமாவதாரத்தின் செவ்வையிலும் போகிறதில்லை’ என்றது, ‘தண்
  இலங்கைக்கிறையைச் செற்ற’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

3. கலியர் - பசியுள்ளவர்.