முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
3

தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய அழகினை அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில். அனுபவிக்கிறவர், 1வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் தம் முயற்சியால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும், அவன் தானே கொடுவந்து காட்டுமன்று பிறப்புத் தொழில் முதலியவைகளால் குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும் கூறி ஆச்சரியப்படுகிறார்.

223

முடிச்சோதி யாய்உனது
    முகச்சோதி மலர்ந்ததுவோ !
அடிச்சோதி நீநின்ற
    தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச்சோதி ஆடையொடும்
    பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ !
    திருமாலே ! கட்டுரையே.

    பொழிப்புரை : திருவொடு மருவிய இறைவனே! உனது திரு முகத்தின் ஒளியானது திருமுடியின் ஒளியாகி மலர்ந்ததுவோ! அல்லது, திருமுடியின் ஒளியானது திருமுகத்தின் ஒளியாகி மலர்ந்ததுவோ! திருவடியின் ஒளியானது நீ நிற்கின்ற தாமரையாகிப் பரந்ததுவோ! அல்லது, தாமரையின் ஒளியானது திருவடியின் ஒளியாகிப் பரந்ததுவோ! நினது பரந்த அழகிய திருவரையின் ஒளியானது இயற்கையான ஒளியையுடைய பீதாம்பரமும் மற்றும் பல வகை ஆபரணங்களுமாகிக் கலந்ததுவோ! அல்லது, பீதாம்பரம் பல வகையான ஆபரணங்கள் இவற்றின் ஒளியானது திருவரையின் ஒளியாகிக் கலந்ததுவோ! யான் அறியும்படி அருளிச்செய்தல் வேண்டும்.

    விசேடக்குறிப்பு : ஓகாரங்கள் ஐயப்பொருளன, கட்டுரைத்தல் - தொடுத்துக்கூறல்.

____________________________________________________

1. ‘ஓதுவார் ஓத்தெல்லாம்’, ‘வாழ்த்துவார் பலராக’, ‘பிறையேறு சடையானும்
  நான்முகனும்’ என்பன முதலாக இத்திருவாய்மொழியில் வரும் பாசுரங்களைத்
  திருவுள்ளம் பற்றி, ‘வேதங்களோடு’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.