முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
330

படியே, பகவத் விஷயத்தில் ஓர் அடி வாராநின்றவாறே வேறு ஒருவர் வீட்டினின்றும் தன் வீட்டிலே புகுந்தாற்போலே இருக்கும்; வேறே சிலரைப் பற்றி அருகே இருக்கிலும் கழியப் போயிற்றதாய் இருக்குமாதலின், ‘போய்’ என்கிறார் என்னுதல்.

    கழிய - ‘கவி, பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை இட்டுச் சொல்லுகையாலே அவனிடத்தில் அடங்காததாய் இருக்கும் அன்றே? ஆகையாலே, அவனை விட்டுக் கழிய’ என்னுதல். அன்றிக்கே, ‘இவன் யாரைச் சொல்லுகிறது? நம்மை அன்றோ?’ என்று கலங்கியிருப்பான்; ஆகையாலே, அச்சொற்பொருள்கள் அவனை விட்டுக் கழிய’ என்னுதல். என்றது, ‘அவனுக்கு இல்லாதனவற்றை இட்டுப் பாடினால், அவற்றை உடையவனை அன்றோ அக்கவிகள் காட்டும்?’ என்றபடி. மிக நல்ல - எத்தனையேனும் நன்றான. வான் கவி - கனத்த கவி. அதாவது, 1‘சேர்க்கப்பட்ட தொகை சந்தி இவைகளையுடையதும்’ என்கிறபடியே, சொற்செறிவுடைத்தாய் இருக்கை. ஆக, ‘மிகவும் நல்லவாய் அரணியவான கவிகளைக்கொண்டு’ என்றபடி.

    புலவீர்காள் - இக்கவிக்கும் பாட்டு உண்கிறவர்களுக்கும் வாசி அறியும் நீங்கள். என்றது, ‘விசேடித்துச் சொல்லப்படுகின்ற அறிவினையுடைய நீங்கள் இப்படிச் செய்யத்தக்கவர்களோ?’ என்கிறார் என்றபடி, இழியக் கருதி - அறிவுடையரானால் நின்ற நிலைக்கு மேலே ஓர் ஏற்றம் தேடிக்கொள்ளுமது ஒழிய, கீழே போய் மிகத்தாழ்ந்த நிலைக்குச் செல்லத் தேடுவார் உண்டோ? ஓர் மானிடம் பாடல் - மிகச்சிறிய மனிதனைப் பாடல். என் ஆவது - 2‘உங்கள் விசேடமான அறிவிற்குச் சேருமதாயோ, அவர்களுக்கு ஒரு நன்மை உண்டாயோ? உங்களுக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயோ, கவிக்குத் தகுவதாயோ? எதற்காகப் பாடுகிறீர்கள்?’ என்கிறார்.

(3)

____________________________________________________

1. ஸ்ரீராமா. பால. 2 : 48.

2. ‘புலவீர்காள்’ என்றதனை நோக்கி, ‘உங்கள் விசேடமான அறிவிற்கு’ என்று
  தொடங்கியும், ‘ஓர் மானிடம்’ என்றதனை நோக்கி, ‘அவர்களுக்கு ஒரு
  நன்மை’ என்று தொடங்கியும், ‘இழியக் கருதி என்றதனை நோக்கி,
  ‘உங்களுக்கு ஒரு பிரயோஜனம்’ என்று தொடங்கியும், ‘வான் கவி’
  என்றதனை நோக்கி, ‘கவிக்குத் தகுவதாயோ’ என்றும் அருளிச்செய்கிறார்.