|
கெ
கொள்ளக் குறைவிலன் -
மேலே கூறிய இரண்டனையும் 1மாறாடிச் சொல்லுகிறார், ‘கொள்ளும் பயனும் உண்டு;
குப்பை கிளர்த்தன்ன செல்வமும் அன்று’ என்று. நீங்கள் யாவை யாவை சில ஏற்றங்களை இட்டுக் கவி
பாடுகின்றீர்கள்? அவற்றை ஏற்குமிடத்தில் ஒரு குறையுடையவன் அல்லன்! எல்லா நற்குணங்களையும்
உடையவன். வேண்டிற்று எல்லாம் தரும் - ‘கொள்ளும் பயனும் பெரிது,’ என்கிறார்; நீங்கள் கவி
பாடினால் போக மோக்ஷங்கள் வேண்டுமவை எல்லாம் தரும். என்றது, ‘இவனை ஒழிந்தார் ஒருவனுக்கு ஒன்றைக்
கொடுத்தால், கொள்கின்றவனுக்கு மற்றொன்று விருப்பமானால், அது கொடுக்க மாட்டார்களே அன்றோ?
இவனிடத்தில் விரும்புகிறவர்கள் தாழ்வாலே இழக்கில் இழக்குமித்தனை; அவன் தரமாட்டாமையாலே
இழக்க வேண்டா,’ என்றபடி. 2‘மோக்ஷத்தைத் தருபவரான பகவான், தியானம் செய்கின்றவர்களுக்கு
இவ்வுலகில் விருப்பமானவற்றையும், சுவர்க்கங்களில் உள்ள பேறுகளையும், சுவர்க்கத்தில் உள்ளவர்களால்
சேவிக்கப்படுகின்ற அந்தப் பரமபதத்தையும் கொடுக்கிறார்’, 3‘விஷ்ணு பகவான் எல்லாப்
பலன்களையும் கொடுக்கிறார்’ என்பன விஷ்ணு தர்மம்.
கோது இல் - ஒருவனுக்கு
ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது, 4‘கால
தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும்
செருக்குத் தோன்ற நிற்றல், கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக்
கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன, என் வள்ளல் - நான் அனுபவத்தைச்
____________________________________________________
1. மாறாடிச்
சொல்லுதலாவது, அங்கே இல்லை என்றதனை இங்கே உண்டு
என்றும், அங்கே உண்டு என்றதனை இங்கே இல்லை
என்றும்
சொல்லுதலாம்.
2.
விஷ்ணு தர்மம்.
3.
விஷ்ணு தர்மம்
இங்கு,
‘வறியார்க்கொன் றீவதே ஈகை;மற் றெல்லாம்
குறிஎதிர்ப்பை
நீர துடைத்து.’
என்ற திருக்குறளின் நுண்பொருளினை
ஆய்ந்து உணர்தல் தகும்,
|