முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
340

அன

அன்றிக்கே, ‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல். என்றது, 1‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி. ஆதலால், எல்லாச் சொற்களும், சரீரமும் அந்தச் சரீரத்தால் அபிமானிக்கப்படுகின்றவனான உயிரும் அந்த உயிருக்குள் அந்தர்யாமியான பரமாத்துமாவுமான இக்கூட்டத்துக்கு வாசகங்கள் ஆகையாலே விசேடியப் பிராதான்யத்தாலே அவனையே சொல்லினவாம். 2‘எவர்கள், பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடின பிராமணர்களையும் பூஜிக்கின்றார்களோ, அவர்கள், எல்லாப் பூதங்கட்கும் அந்தரியாமியாய் இருக்கிற விஷ்ணுவையே பூஜித்தவர்கள் ஆவர்கள்,’ என்பது ஸ்மிருதி.

(6)

317

        சேரும் கொடைபுகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
        பேரும் உடைய பிரானைஅல் லாம்,மற்று யான்கிலேன்;
        மாரி அனையகை, மால்வரை ஒக்கும்திண் தோள்என்று,
        பாரில்ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.

   
பொ-ரை : ‘தகுதியான கொடையும் புகழும் எல்லை இல்லாமல் இருக்கின்றவனை, ஒப்பற்ற ஆயிரம் திருப்பெயர்களையுமுடைய பெருமானை அல்லாமல், கைகள் மேகத்தைப் போன்றவை வலிய தோள்கள் பெரிய மலையை ஒத்தவை என்று பூமியில் தூறு போலப் பயன் அற்று இருக்கின்ற ஒருவனைப் பார்த்து மெய் கலவாத பசும்பொய்களைப் பேசுவதற்கு யான் தகுதியுடையேன் அல்லேன்,’ என்கிறார்.

    வி-கு :
‘பிரானை அல்லால் பாரில் ஓர் பற்றையை ‘மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள்’ என்று பச்சைப் பசும்பொய்கள் பேச யான் கிலேன்,’ எனக் கூட்டுக. மற்று - பிறிது என்னும் பொருளில் வந்தது. கிலேன் - ஆற்றில் உடையேன் அல்லேன். பற்றை - சிறு தூறு.

____________________________________________________

1. முதல் திருவந். 67.

2. விசேடியமாய் இருப்பதனாலே பிரதானனான ஈசுவரனுக்கே சர்வ சப்தங்களும்
  வாசகங்கள் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘எவர்கள்’ என்று
  தொடங்கி. இது, தக்ஷஸ்மிருதி.