முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
345

இல

இலாதன - இப்படிப்பட்ட குணங்கள் கணக்கு இன்றி இருத்தல். பாடிப் போய்க் காயம் கழித்து - 1‘சக்கரவர்த்தி மக்களுடைய காவல் நிமித்தம் சுற்றும் பயணம் திரிந்து முத்தின் குடை நிழலிலே இருந்து சரீரத்தால் முதுமைப்பருவத்தை அடைந்தார்,’ என்றது போன்று, பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு. அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன் - இந்தச் சரீரத்தைக் கழித்த பின்னர், ஆத்தும அனுபவம் பண்ணியிருத்தல், வேறு பிரயோஜனங்களைக் கொள்ளுதல் செய்ய இராமல், அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக்கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின்கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையையுடைய யான்.

    மாய மனிசரை - பிறப்போடே முடிகின்ற அழிவினையுடையவர்களை. என்றது, ‘பாடத் தொடங்கின கவி முடிவதற்கு முன்னே முடியும் மனிதரை’ என்றபடி. என் வாய் கொண்டு என் சொல்ல வல்லேன் - 2‘கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார். வேறே சிலர், ‘வாக்காலே பாடினால் பாடலாம்’ என்பார், ‘என் வாய் கொண்டு’ என்கிறார். 3‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்னக் கடவதன்றோ? அங்கே காதலைப்பண்ணிப் புறம்பே சிலரைக் கவி பாடப் போமோ? ‘ஆசைப்படுவது ஒரு விஷயமாய், பேசுவது ஒரு விஷயமாய் இருக்குமோ? 4எல்லா இந்திரியங்களுக்கும் அடி, மனம் அன்றோ? அதனைத் தொடர்ந்து சொல்லுமத்தனை அன்றோ மற்றைய உறுப்புகள்? 5இப்போது இப்படிச் சொல்லுகைக்குக் காரணம் என்?’

___________________________________________________

1. ஸ்ரீராமா. அயோத், 2 : 7.

2. ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே
  ‘கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.

3. தம்முடைய வாய்கொண்டு பாட முடியாமைக்கு ஏது, ‘மனம் முன்னே
  வாக்குப் பின்னே’ என்பது. ‘அங்கே காதலைப் பண்ணி’ என்றது, ‘மனம்
  ஈசுவரனிடத்தில் காதலோடு இருக்க’ என்றபடி.

4. ‘மனம் முன்னும் வாக்குப் பின்னுமாகைக்குக் காரணம் யாது?’ என்ன, விடை
  அருளிச்செய்கிறார், ‘எல்லா இந்திரியங்களுக்கும்’ என்று தொடங்கி.

5. ‘இப்போது இப்படிச் சொல்லுகைக்குக் காரணம் என்?’ என்றது,
  ‘புலவர்களைப் பார்த்துப் ‘புலவீர்! நீங்கள் மக்கள் விஷயமாகக் கவி
  பாடன்மின்,’ என்று கூறும் இவ்விடத்தில், ‘நான் பிறரைக் கவி பாடேன்’
  என்று சொல்லுகைக்குக் காரணம் என்?’ என்றபடி.