முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
36

படைத்த - விசித்திரமாக உலகத்தையுண்டாக்கின. 1இரங்கத்தக்க நிலையைக்கண்டு, 1இவை கரண களேபரங்களைப் பெற்றுக் கரைமரஞ் சேரவேணும்’ என்று அருள்வசப்பட்டவனாய்ப் படைத்தபடி. எம் முகில் வண்ணனே - 2அவன் எல்லாப் பொருள்கள் நிமித்தமாக உதவியைச் செய்தான்; அவ்வுதவியைத் ‘தன் பொருட்டு’ என்றிருக்கிறார் செய்ந்நன்றியறியுமவராதலின். ஒருவன் சாதநாநுஷ்டானங்களைச் செய்து மழையைப் பெய்விக்க உலகம் வாழ்ந்து போமாறு போன்று, அவன் எனக்காக உலகத்தைப் படைத்தான்; உலகம் வாழ்ந்துபோயிற்று என்று இருக்கிறார். சர்வ விஷயமாக உதவி செய்தபடியும், பிரதியுபகாரங்கொள்ள இராமையும் நோக்கி, ‘முகில் வண்ணனே’ என்கிறார்.    (வண்ணம் என்பது ஈண்டுத் தன்மையைக் குறித்தது; நிறம் அன்று.) அந்நாள் - கரண களேபரங்கள் அற்றதாய், 3தமோ குணத்தோடு கூடியதாய், அருள் செய்யக்கூடிய நிலையையடைந்ததாய்க் கிடந்த அந்நாள். நீ - இந்நிலையிலே 4‘பிரகிருதியில் லயப்பட்டிருந்த அக்காலத்தில் ஆத்துமவர்க்கமில்லாமையால் அவன் தனியனாக மகிழ்ச்சியடைந்தானில்லை,’ என்கிறபடியே, இழவு உன்னதாக முகங்காட்டின நீ. தந்த - திருவடிகளிலே தலைசாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக உடம்பை உதவி செய்த. இனி, ‘நீ தந்த’ என்பதற்குப் ‘பேரருட்கடலான நீ

____________________________________________________

1. ‘நீ தந்த’ என்றதனைக் கடாக்ஷித்துப் ‘படைத்த’ என்பதற்கு பாவம்,
  ‘இரங்கத்தக்க’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. ‘எம்’ என்றதற்கு பாவம், ‘அவன் எல்லாப் பொருள்கள்’ என்று தொடங்கும்
  வாக்கியம். ‘தமக்கு ஆனால் எல்லார்க்கும் உபகாரம் ஆம்படி என்?’ என்ன,
  அதற்கு விடையாக, ‘ஒருவன் சாதநாநுஷ்டானங்களை’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். சாதந அநுஷ்டானம் - மழை பெய்வதற்காகச்
  செய்யப்படும் வருண ஜபம் முதலாயின.

  ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யுமழை என்றுமுனம் - சொல்லாடும்
  ஐயம் அகல அகிலமெலாந் தற்சுட்டிப்
  பெய்யும் மழையென்னும் பேராளன்’

  என்றார், துறைமங்கலம் சிவப்பிரகாசரும்.

3. ‘தமோ குணத்தோடு கூடியதாய்’ என்றது, பிரகிருதியினுடைய
  சூக்ஷ்மாவஸ்தையை.

4. மஹோபநிடதம்.