முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
364

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1முதற்பாசுரத்தில் திருவவதாரங்களைச் சொன்னார்; இப்பாசுரத்தில், ‘திருவவதாரத்துக்கு மூலமாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்து, அங்குநின்றும் ஸ்ரீ வசுதேவ குமாரனாய் வந்து திருவவதாரம் செய்து, அடியார்களுடைய பகைவர்களை அழியச்செய்த கிருஷ்ணனுடைய புகழைப் பேசப்பெற்ற எனக்கு ஒரு தட்டு இல்லை,’ என்கிறார்.

    தடம் கடல் - குறைவு இல்லாமல் கண்வளர்ந்தருளுவதற்கு இடமுடைத்தான கடல். ‘தடம் கடல்’ என்றவர், ‘குறைவு இல் தடம் கடல்’ என்கிறார்; ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, 2‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று, அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. 3யசோதைப்பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக்கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை. இதனால், ‘நானே அன்று; என்னிலும் குறைவு அற்றார் உளர்’ என்றபடி. கோள் அரவு ஏறி - திருமேனியினுடைய பரிசத்தால் தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளியை உடையனான திருவனந்தாழ்வான் மேலே ஏறி. கோள் - ஒளி. அன்றிக்கே, ‘‘கோள்’ என்று மிடுக்காய், சர்வேசுவரனும் சர்வேசுவரியும் கூடித் துகையாநின்றால் பொறுக்கைக்கு ஈடான, தரிக்கும் ஆற்றலையுடைய திருவனந்தாழ்வான்’ என்னலுமாம். 5‘சிறந்த ஞானத்துக்கும் ஆற்றலுக்கும் இருப்பிடமான ஆதிசேடன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். மென்மை நாற்றம் குளிர்த்தி இவற்றை இயற்கையாக உடையவன் ஆதலின், ‘அரவு’ என்கிறார்.

____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. முதல் திருவந்தாதி, 19.

3. அதனைத் திருஷ்டாந்த மூலமாக விளக்குகிறார், ‘யசோதைப் பிராட்டி’
  என்று தொடங்கி.

4. ‘என்னிலும் குறைவற்றார் உளர்’ என்றது, ‘அவன் சீர் பரவிக் குறைவு
  அற்ற என்னிலும், அவன் திருமேனி தீண்டப் பெற்றுக் குறைவற்றாரும்
  உளர்’ என்றபடி. மேல் திருப்பாசுரத்தில் ‘சீர் பரவப் பெற்ற நான் ஓர்
  குறைவிலன்’ என்றாரே அன்றோ?

5. ஸ்தோத்திர ரத்நம்.