முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
371

விரதம்’ என்கிறானோ? அன்று - அநிருத்தாழ்வானைச் சிறையில் வைத்த அன்று. படையொடும் வந்து எதிர்ந்த - 1‘தனக்கு வெற்றி நிச்சயம்’ என்று அது காண்கைக்குச் சேனையைத் திரட்டிக்கொண்டு வந்த. ‘முண்டன் நீறன்’ என்ற திருப்பாசுரம் இங்கு அநுசந்திக்கத் தகும். இனி, ‘படை’ என்பதற்கு, ‘ஆயுதம்’ என்று பொருள் கூறலுமாம். ‘சூலத்தைத் தரித்த சிவன், கிருஷ்ணனால் போரில் எழுப்பப்படுகின்ற பல வகையான சப்தங்களைக் கேட்டு மயக்கத்தை அடைந்தான்,’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.

   
‘தன் வறுமையை முன்னிட்டு அஞ்சலியைக் கொண்டுவந்து கிட்டுதற்குத் தக்க பரம்பொருளை இப்படி ஆயுதத்தோடு எதிர் இடுகைக்குக் காரணம் என்?’ என்ன, ‘திரிபுரம் செற்றமை’ என்கிறார் மேல்: திரிபுரம் செற்றவனும் - முப்புரங்களை எரித்த செயலாலே உண்டான செருக்கினை உடையவன் ஆகையாலே. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், 2கடல் கடைகிற

____________________________________________________

1. ‘தான் தன்னைத் துணை வேண்டாச் செருவென்றியனாக
  நினைத்திருந்தவனாதலின், தன்னோடு படையைத் திரட்டிக்கொண்டு
  வந்தது தனக்குத் துணைக்காக அன்று, தன் வீரத்தைக்
  காண்பிப்பதற்காகவே, என்கிறார் ‘தனக்கு வெற்றி நிச்சயம்’ என்று
  தொடங்கும் வாக்கியத்தால். சேனையோடு வந்து எதிர்த்தற்குப் பிரமாணம்,
  ‘முண்டன் நீறன்’ என்பது. இது, திருச்சந்த விருத்தம், 71.

 
‘மோடி யோட அங்கி வெப்பும் மங்கி யோட ஐங்கரன்
   முடுகி யோட முருகன் ஓட முக்கண் ஈசன் மக்களைத்
   தேடி யோட வாணன் ஆயி ரம்பு யங்கள் குருதிநீர்
   சிந்தி யோட நேமி தொட்ட திருவ ரங்க ராசரே!’

  என்றார் திவ்ய கவியும்.

     
ஆயுதத்தோடு வந்து எதிர்த்ததற்குப் பிரமாணம், ‘சூலத்தைத் தரித்த’
  என்று தொடங்குவது. இது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33 : 41.

2. ‘சிவன் திரிபுரங்களைச் செற்றது, சர்வேசுவரன் அந்தராத்துமாவாக
  இருக்கையால் அன்றோ? அங்ஙனமிருக்க, அது செருக்குக் கொள்ளுதற்குக்
  காரணமாயவாறு யாங்ஙனம்?’ என, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘கடல் கடைகிற காலத்தில்’ என்று தொடங்கி. கடல் கடைகிற காலத்தில்
  எட்டு வடிவு கொண்டு நின்றதனை,

  ‘ஓருரு வெற்பைத் தரித்தது; தானவர் உம்பருள்ளாய்
   ஈருகு நின்று கடைந்தது; வேலை யிதனிடையோர்
   பேருரு இன்னமு தோடே பிறந்தது: பெண்மை கொண்டுஓர்
   நாருரு நின்றது; அரங்கா! இதுஎன்ன நற்றவமே!’

  (திருவரங்கத்து மாலை, 25) என்ற செய்யுளால் உணரலாகும்.