முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
374

New Page 1

தோள் துணித்த தலைவன்’ அன்றோ இவன்? தலைமையாவது, வாணனைக் கைம்முதல் அறுத்துத் தலை அழியாமல் வைத்த தலைமை. ஆக, இதனால், அநிருத்தாழ்வானுக்காக மார்விலே அம்பு ஏற்கையாலே ‘அடியார்கட்குத் தஞ்சம்’ என்று நம்புதற்குத் தட்டு இல்லை என்று தெரிவித்தபடி. பற்றி யான் இறையேனும் இடர் இலனே - இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.

(4)

326

        இடர்இன்றி யேஒரு நாள்ஒரு போழ்தில்எல்
            லாஉல கும்கழியப்
        படர்புகழ்ப் பார்த்தனும் வைதிக னும்உடன்
            ஏறத்திண் தேர்கடவிச்
        சுடர்ஒளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
            வைதிகன் பிள்ளைகளை
        உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
            ஒன்றும் துயர்இலனே.

   
பொ-ரை : ‘ஒரு நாளிலே ஒரு முகூர்த்தத்திலே, துன்பம் இல்லாமல், எல்லா உலகங்கட்கும் அப்பால் படர்ந்த புகழையுடைய அருச்சுனனும் பிராமணனும் தன்னுடன் ஏறி வரும்படியாகத் திண்ணிய தேரைச் செலுத்தி, ஒளிப்பிழம்பாய் உள்ள தனது பரமபதத்தில் தங்கியிருந்த பிராமணனுடைய பிள்ளைகளைச் சரீரத்தோடும் கொண்டுவந்து கொடுத்த இறைவனை அடைக்கலமாக அடைந்து சிறிதும் துயர் உடையேன் அல்லேன்,’ என்கிறார்.

    வி-கு :
‘இன்றி ஏறக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும், ‘கழியக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும் முடிக்க, கொடுத்தவன் - வினையாலணையும் பெயர்.

    ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1பிராமணனுடைய புத்திரன் நிமித்தமாகச் சென்ற செலவைக் கூறிக்கொண்டு, ‘இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை,’ என்கிறார்.

____________________________________________________

1. வைதிகன் பிள்ளைகளை, உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
  ஒன்றும் துயர் இலனே’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.