முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
38

ஆக

    ஆக்கையின் வழி உழல்வேன் - 1நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்; நான் சரீரத்தின் வழியே போந்தேன். ‘தெப்பத்தை நூக்கிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாயிருக்க, ‘சரீரம் பாங்கன்று’ என்று நீரின் வழியே சென்று கடலிலே புகுவாரைப் போலே, இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினை விளைத்துக்கொண்டேன்,’ என்கிறார் என்பர் எம்பார். வெந்நாள் - சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தாற்போன்று தோற்றாநின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார். இனி, பகவானைப் பிரிந்து இருக்கையாலே, நெருப்பை ஏறட்டினாற் போலே இருக்கிறதாதலின் ‘வெம்நாள்’ என்கிறார். என்னுதல். நோய்-பிறவி. இனி, ‘பகவானைப் பிரிந்த பிரிவாலுளதாய நோய்’ என்னுதல். ‘ஆயின், நோய் என்பது பிரிவாகிய நோயினைக் காட்டுமோ?’ எனின், 2ஸ்ரீபரதாழ்வானுடைய நோய் என்றால் சாதுர்த்திகமாயிராது இராமவிரகத்தாலேயாயிருக்குமே? அப்படியே இவர் நோயும் பிரசித்தங்காணும். வீய - முடிய.

    வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் - பிரிவுத் துன்பத்துக்கு அடியான அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்கி உன்னை நான் எப்பொழுது வந்து கூடுவன்? 3‘என் கணவர், இராக்கதர்களுக்கு அழிவினைச்செய்து, இராவணனையும் கொன்று, இலங்கையையும் வேரோடு அழித்து, எப்பொழுது என்னைப் பார்ப்பார்?’ என்று பிராட்டி கூறியது போன்று ‘எந்நாள் இனி வந்து கூடுவன்?’ என்கிறார். 4‘பாய்ந்து’ என்பதில் சினம் தோற்றுகிறது. ‘ஒரு 5சர்வ சத்தி செய்யுமதனை யான் செய்யவோ?’ என்கிறார். எந்நாள் - எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை; 6பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதி

___________________________________________________

1. ‘ஒன்றை நினைத்து’ என்றது, ‘சரணகமல சமாஸ்ரயணத்துக்குக் காரணமாம்
  என்று நினைத்து’ என்றபடி.

2. திருவாய்மொழி முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம், பக். 157 குறிப்புக் காண்க.

3. ஸ்ரீராமா, சுந். 37 : 6.

4. ‘போக்கி’ என்னாது ‘பாய்ந்து’ என்கிறாராதலின், ‘சினம் தோற்றுகிறது’
  என்கிறார்.

5. சர்வசக்தி - எல்லாம் வல்ல இறைவன்.

6. ஸ்ரீராமா. யுத்த. 127 : 1.