முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
384

    ஈடு : எட்டாம் பாட்டு. 1நித்திய விபூதியை அனுபவித்துக் கொண்டிருக்கிற மேன்மையையுடையவன் உலகினைக் காக்கும் நீர்மையினை நினைக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

    அல்லல் இல் இன்பம் அளவு இறந்து - சுவர்க்கம் முதலான உலகங்களிற்போன்று துக்கம் கலந்ததாய் அளவுக்கு உட்பட்ட தாய் இராமல், துக்கத்தின் வாசனை சிறிதும் இல்லததாய் இன்பத்திற்கே நிலைக்களனாய் அளவிடப்படாததான ஆனந்தத்தை உடையவன். 2எங்கும் அமர் அழகன் - மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியையுடையவன். எங்கும் சூழ் ஒளியன் - திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன். அன்றிக்கே, ‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம். அன்றிக்கே, ‘எங்கும் அழகு அமர் - பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால் ‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதிகேசம் பழிப்பு அன்று, சூழ் ஒளியன் - மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.

    அல்லி மலர் மகள் போக மயக்குகள் - 3இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது. மலரில் வாசனை வடிவு கொண்டு இருப்பதைப் போன்று தனக்குமேல் ஓர் இனிய பொருள் இல்லாதவளான பெரிய பிராட்டியுடைய சேர்க்கையாலே பிறந்த ஆச்சரியமான ஆனந்தத்தையுடையனான சர்வேசுவரன் மயக்குகள் - ஆனந்தங்கள். மயங்கள் - கூடல், கலத்தல்.

_____________________________________________________

1. பாசுரத்தின் முதல் மூன்று அடிகளைத் திருவுள்ளம் பற்றி, ‘நித்திய விபூதியை
  அனுபவித்துக்கொண்டிருக்கிற மேன்மையையுடையவன்’ என்கிறார். ‘கண்ணன்’
  என்பதனைத் திருவுள்ளம் பற்றி, ‘நீர்மையினை’ என்கிறார்.

2. ‘ஒளியன்’ என்றதிலுள்ள ‘அன்’ விகுதியைப் பிரித்து, ‘அழகு’ என்ற
  சொல்லோடும் கூட்டுக. ‘எங்கும் அமர் அழகன்; எங்கும் சூழ் ஒளியன்’ என்க.’

3. ‘எங்கும் அழகமர் சூழ் ஒளியன்’ என்றதனை இடமாக்கிக்கொண்டு
  ரசோக்தியாகப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இதனால்’ என்றது முதல்
  ‘சொல்லுகிறது’ என்றது முடிய. ‘நெஞ்சோடே’ என்றது, சிலேடை; ‘மார்பிலே
  இருந்துகொண்டு’ என்பதும், ‘மனத்தோடு’ என்பதும் பொருள்.