முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
388

நக

    நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை - 1தன் கூட்டத்துக்கு உபகாரகனாகப் பிரசித்தனாய் இருக்கிற சிவபிரானோடு கூட, அவனுக்கும் தந்தையான ஏற்றத்தையுடைய நான்முகன் தொடக்கமான எல்லா அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களையும் ஒரே தடவையில் பிரளயம் தேடிலும் காணவொண்ணாதபடி வயிற்றிலே வைத்துக் காப்பாற்ற வல்ல சர்வ ரக்ஷகனை. ஒடுங்க விழுங்குகையாவது, 2‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய் கோத்தது போன்று 3விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை. இப்படிப்பட்டவனை, பெற்று ஒன்றும் தளர்வு இலனே - 4’எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்ப் பிரமன் முதலானவர்களையும் காப்பாற்றுகின்றவனானவனை வேறு பயன் ஒன்றையும் கருதாதவனாய் அடைந்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.

    5‘நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற மூன்று உலகங்களையும் பாதுகாக்கையாலே அவர்களையும் பாதுகாப்பவன்’ என்கை.

(9)

____________________________________________________

1. ‘நக்கன் இவருக்கு உபகாரகன் ஆவனோ?’ என்னும் வினாவிற்கு விடையாகத்
  ‘தன் கூட்டத்திற்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘பிரான்’ என்றதிலே
  நோக்கு.

2. பெரிய திருமொழி, 11. 5 : 3.

3. விசைத்து - மிகுத்து.

4. ‘வேண்டும் உருவு கொண்டு விகிர்தம் செய்து’ என்றதிலே நோக்காக
  ‘எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்’ என்கிறார்.

5. ‘நைமித்திகப் பிரளயமானபோது’ என்றது, ‘நைமித்திகப் பிரளய காலத்தில்
  என்று பொருள் கூறுமிடத்தில்’ என்றபடி. ஆகப் பின் இரண்டு அடிகட்கு,
  ‘மஹாப்பிரளய காலத்தில்’ என்றும், ‘நைமித்திகப் பிரளய காலத்தில்’ என்றும்
  இரு வகையாகவும் பொருள் கூறப்பட்டு வந்தமை புலனாகின்றது.
  ‘அங்ஙனமாயின், நைமித்திகப் பிரளயத்தில் சிவன் முதலாயினோரை விழுங்க
  இல்லையே? ‘நக்கபிரானோடு.. ...ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை’ என்று
  பாசுரம் கூறுதல் பொருந்துமோ?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற’ என்று
  தொடங்கி.