|
331
331
தளர்வுஇன்றி யேஎன்றும்
எங்கும் பரந்த
தனிமுதல் ஞானம்ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்
கள்அறி யாவகை
யால்அரு
வாகிநிற்கும்
வளர்ஒளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள்
ஐந்தை
இருசுடரைக்
கிளர்ஒளி மாயனைக்
கண்ணனைத் தாள்பற்றி
யான்என்றும்
கேடுஇலனே.
பொ-ரை :
‘தளர்ச்சியில்லாமல் எக்காலத்திலும் எல்லா இடத்திலும் பரந்திருக்கின்ற தனித்த காரணமான
ஒப்பற்ற ஞானத்தினையுடையவனாகி, அளவிற்குட்பட்ட ஐம்புலன்களும் அறியாதபடி அருவாகி நிற்கின்ற.
வளர்கின்ற ஒளியையுடைய தலைவனை, திருமேனியையுடையவனை, ஐம்பெரும்பூதங்களையும் சூரியசந்திரர்களையும்
சரீரமாக உடையவனை, கிளர்கின்ற ஒளியையுடைய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனை,
கிருஷ்ணனைத் திருவடிகளைப் பிடித்ததனால் யான் எக்காலத்திலும் கேடு இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.
வி-கு :
‘ஒன்றாய் அருவாகி நிற்கும் ஈசன்’ என்க. பற்றி - பற்றியதனால்; ‘செய்து’ என்னும்
வாய்பாட்டு வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது.
ஈடு : பத்தாம்
பாட்டு. 1‘உலகமே உருவமாய்ச் சத்தையையும் நோக்குமவனாய், தன்னிடத்து விருப்பம்
செலுத்தினாரைத் தனக்கே உரியதான சிறப்பையுடைய விக்கிரகத்தோடே வந்து அவதரித்துக் காக்குமவனைப்
பற்றி எனக்கு ஒரு கேடு இல்லை,’ என்கிறார்.
2தளர்வு
இன்றியே என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய் - என்றும் உண்டாய் எங்கும் ஒக்கப்
பரந்து நிறைந்து நின்றால் ஒரு தளர்த்தி இல்லாமலே, படைக்குமிடத்தில்
____________________________________________________
1. ‘எங்கும் பரந்த’
என்பது முதலானவைகளைக் கடாக்ஷித்து, ‘உலகமே
உருவமாய்’ என்பது முதலானவைகளையும், ‘கிளர் ஒளி மாயனை’
என்பது
முதலானவைகளைக் கடாக்ஷித்துத் ‘தன்னிடத்து விருப்பம் செலுத்தினாரை’
என்பது முதலானவைகளையும்
அருளிச்செய்கிறார்.
2. ‘தளர்வு இன்றியே
என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய்’
என்பதற்கு இரண்டு விதமாகப் பொருள்
அருளிச்செய்கிறார். முதற்பொருளில்
‘ஞானம் ஒன்றாய்’
என்றது, ‘நினைவின் உருவமான ஞானத்தைக் குறித்து
அருளிச்செய்கிறார்’ என்றபடி. 46ஆம் பாசுர
வியாக்கியானம் பார்க்கவும்.
இரண்டாவது பொருளில், ‘ஞானம் ஒன்றாய்’ என்றது, ‘தர்ம பூத
ஞானத்தையாதல்,
சொரூப ஞானத்தையாதல் குறித்து அருளிச்செய்கிறார்,’
என்றபடி. ‘மூன்று விதக் காரணமும் தானேயாய்’
என்றதனை 48 ஆம் பாசுர
வியாக்கியானத்தால் உணரலாகும்.
|