முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
391

உலக

உலகமே உருவமாக நிற்கிற அதுவும் இவர்க்கு அனுபவிக்கத் தக்கதாய் இராநின்றது என்பது போதரும்.

    கிளர் ஒளி மாயனைக் கண்ணனை - இவ்வுலகத்துள்ளே இவ்வுலக சம்பந்தம் இல்லாத தனது திருமேனியை, இதர சாதிகளின் தன்மையை உடையதாம்படி ஆக்கிக்கொண்டு வந்து கிருஷ்ணனாய் அவதரித்தவனை. கண்ணனைத் தாள் பற்றி - 1‘என் ஒருவனையே பற்றுக்கோடாகப் பற்று,’ என்றவன் திருவடிகளைப் பற்றி. யான் என்றும் கேடு இலன் - ‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.

    ‘மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்’ என்று கூட்டுக.

(10)

332

            கேடுஇல் விழுப்புகழ்க் கேசவ னைக்குரு
                கூர்ச்சட கோபன்சொன்ன
            பாடல்ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும்
                பயிற்றவல் லார்க்குஅவன்
            நாடும் நகரமும் நன்குடன் காண
                நலனிடை ஊர்திபண்ணி
            வீடும் பெறுத்தித்தன் மூவுல குக்கும்
                தரும்ஒரு நாயகமே.

    பொ-ரை : ‘அழிவில்லாத விழுமிய புகழையுடைய கேசவனைப்பற்றி, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவல்லவர்கட்கு, அவ்விறைவன், நாடும் நகரமும் நன்மையோடே கூடக் காணும்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பத்தோடு நடக்கச் செய்து, மோக்ஷத்தையும் பெறச்செய்து, தன்னுடைய மூன்று உலகங்கட்கும் ஒப்பற்ற தலைமையையும் தருவான்,’ என்றபடி.

____________________________________________________

1. ஸ்ரீ கீதை, 18 : 66.