முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
42

பல

பல் பிறவியில் - மூலப்பகுதி சம்பந்தங்காரணமாக உண்டாகிற பல வகைப்பிறவிகளிலே. படிகின்ற - தரை காணாமல் முழுகுகிற. இக்கேட்டிலே வெறுப்பின்றிப் பொருந்தியிருந்தாராதலின், ‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார். ‘படிகின்ற’ என்ற நிகழ்காலத்தால், ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும். யான் - சமுசாரத்தின் வழியிலே செல்லுகிற நான். தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து - இவ்வாத்துமாக்கள் உள்ளவன்றே உள்ளனவாய், அனுபவித்தாலும் அழியாதனவாய், ஈஸ்வரன் போக்கு மன்றும் ஒரு நிலை நின்று போக்கவேண்டும்படி பிரபலமாய், ஒன்றோடொன்று தொடர்ந்து தாம் கூட்டமாயிருக்கிற பாபங்களை வாசனையோடே போக்கி. தொடர் - விலங்கு. நின் மா தாள் சேர்ந்து - 1பரமப் பிராப்பியமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி. நிற்பது - நித்திய சமுசாரிகளுக்குப் பகவானையடைதல்; 2‘பறக்கிற தொன்றிலே பாரம் வைத்தாற்போலே இருப்பதொன்று’ ஆதலின், ‘நிற்பது’ என்கிறார். 3‘பயமில்லாமைக்காகப் பரம்பொருளிடத்தில் இடைவிடாத நினைவின் ரூபமான நிஷ்டையையடைகிறவன் பயமின்மையை அடைகிறான்,’ எனப்புகலும் உபநிடதம். நிற்பது எஞ்ஞான்றுகொலோ - 4‘அது எந்நாளாக வற்றோ? ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ, அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பதுபோன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி. இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் பொருள் அருளிச்செய்வர்.

(2)

____________________________________________________

1. பரமப் பிராப்பியம் - மேலான பேறு. பிராப்பியம் - அடையத்தக்கது.

2. பறக்கிறது - எச்சில் இலை.

3. தைத்திரீய உபநிடதம், 7.

4. ‘எந்நாளாக வற்றோ?’ என்றது, ‘இந்நாளாக வற்றோ?’ என்றபடி.
  ‘அப்படிச்சொன்ன பேர் உண்டோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளத்தே
  கொண்டு அதற்கு விடையாகக் கௌசல்யாதேவியார் கூறிய
  வார்த்தையைமேற்கோளாகக் காட்டுகிறார். ‘காட்டினின்றும்’ என்று தொடங்கி.
  இது, ஸ்ரீராமா. அயோத். 24 : 37.

      ‘எஞ்ஞான்றுகொலோ!’ என்பதற்கு வேறும் ஒரு கருத்தினை அருளிச்
  செய்கிறார், ‘இனி, இதற்கு’ என்று தொடங்கி. இப்பொருளில், ‘எஞ்ஞான்று’
  என்பது வினாப்பொருளில் வந்ததாகும். ‘இறைவன் ஒரு நாள் வைத்துக்
  கொடுத்தால் பெற்றதாகக் கொண்டு தரித்திருக்கலாம்,’ என்பது கருத்து.