முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
49

யானைக்குத் தோன்றியது போலேயாதல், தூணிலே தோன்றியது போலேயாதல் வந்தும். என் மனத்தினை - உன்னையொழியத் தரியாதபடியான என் மனத்தை. நீ - நிலைமையறிந்து தரிப்பிக்கும் நீ. இனி, இதற்கு ‘உருவழிந்தவற்றை உண்டாக்க வல்ல நீ’ என்னுதல். சிந்தாமல் செய்யாய் - மனம் நீராய் மங்கிப் போகாதபடி செய்கின்றிலை. ‘இதுவே இதுவாகில், எங்கு வந்து அணுகிற்பன்?’ என்கிறார். இதுவே இதுவாகில் - உன்னையொழிய மங்கிப்போகையும் இதற்குத் தன்மையாய், இது மங்கக் கொடுத்துப் பார்த்திருக்குமது உனக்குத் தன்மையாய்விட்டதாகில்.

    கொந்தார் காயாவின் கொழுமலர்த் திரு நிறத்த எந்தாய் - கொந்து ஆர்ந்து தழைத்திருந்துள்ள காயாவினுடைய கொழுவிய மலர் போலே குளிர்ந்திருந்துள்ள திருநிறத்தைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே! என்றது, 1‘சிறியதுக்கு இனியது இடேன்,’ என்று இப்படிச் செய்வதாக இருந்த நீ இவ்வடிவில் சுவட்டை எனக்கு அறிவித்தது என்?’ என்கிறார் என்றபடி. யான் - உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான். இனி, இதற்கு, ‘இவ்வடிவின் இனிமையையறிந்த யான்’ என்னுதல். உன்னை - பிரியில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை. இனி, 2‘அந்தப் பரமாத்துமா எவனை வரிக்கிறானோ, அவனால் அடையத்தக்கவன்; பரமாத்துமா அவனுக்கே தன் சொரூபத்தைக் காட்டுகிறான்,’ என்கிறபடியே, ‘நீயே அனுபவிப்பிக்கும் உன்னை’ என்னுதல். எங்கு வந்து அணுகிற்பன் - என்ன சாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக்கடவேன்? ‘நான் உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்னுதல்.

(5)

____________________________________________________

1. ‘சிறியதுக்கு இனியது இடேன் என்று இராமல் எனக்கு ‘அறிவித்தது என்?’
  என்று கூட்டுக

2. முண்டக உபநிடதம், 3. 2 : 3.

      இங்கு, யான் என்பதற்கு அருளிச்செய்த இரண்டு பொருள்களையும்,
  உன்னை என்பதற்கு அருளிச்செய்த இரண்டு பொருள்களையும் எதிர் நிரல்
  நிறையாகக் கூட்டிப் பொருள் கொள்க ‘எங்கு வந்து அணுகிற்பன்?’
  என்பதற்கு அருளிச்செய்யும் இரு வகைப் பொருள்களுள் முதற்பொருளை
  எம்பெருமானார் நிர்வாஹத்துக்கும், இரண்டாவது பொருளை முன்புள்ள
  முதலிகள் நிர்வாஹத்துக்குமாகக் கொள்க.