முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
54

ஒருவன்தான் இருக்கிறேன் என்று எண்ணுகிறாய்; மனத்தில் நித்தியவாசம் செய்கிற ஆதிபுருஷனாகிய பகவானை நீ அறியவில்லை; எவர் பாப காரியங்களை அறிகின்றவரோ, அவருடைய அண்மையில் நீ பாவத்தைச் செய்கிறாய்,’ என்றாள் (துஷ்யந்த மகாராசனை நோக்கிச்) சகுந்தலை. கண்ணனை மேவுதுமே - 1சுலபன் என்று நினைத்து நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ?’ என்னுதல்.

    ‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று கூட்டிப் பொருள் கோடலுமாம். இப்பொருளுக்கு ஏகாரம் அசைநிலை. முன்னைய பொருளில் ஏகாரம் எதிர்மறை.

(7)

241

மேவு துன்ப வினைகளை
    விடுத்துமிலேன்;
ஒவுதல் இன்றி உன்கழல்
    வணங்கிற்றிலேன்;
பாவு தொல்சீர்க் கண்ணா!என்
    பரஞ்சுடரே!
கூவுகின்றேன் காண்பான்;எங்கு
    எய்தக்கூவுவனே?

    பொ-ரை : பரவிய இயல்பாய் அமைந்த புகழையுடைய கண்ணபிரானே! எனது மேலான ஒளியுருவனே! பொருந்திய துன்பங்களை உண்டுபண்ணுகின்ற பாவங்களை நீக்குவதும் செய்திலேன்; இடைவிடாமல் உன் திருவடிகளை வணங்குதலும் செய்திலேன்; உன்னைக் காண்பதற்கு அழைக்கிறேன்; எங்கே கிட்டுவதாகக் கூப்பிடுகிறேன்?

    வி-கு : ‘மேவு’ என்பது வினைகளுக்கு அடை. ஒவுதல் - ஒழிதல். ‘வணங்ககிற்றிலேன்’ என்பது ‘வணங்கிற்றிலேன்’ என வந்தது விகாரம். ‘தொன்மை’ என்பது ஈண்டு இயற்கையைக் காட்டிற்று. காண்பான் - வினையெச்சம்.

____________________________________________________

1. ‘கண்ணன் என்பதற்குச் சுலபன் என்றும், நிர்வாஹகன் என்றும் இரண்டு
  பொருள் அருளிச்செய்கிறார். ‘கிட்டப்போமோ?’ என்றது, ‘கிட்டப்போகாது’
  என்றபடி. இது முன்புள்ள முதலிகள் நிர்வாகத்துக்கு ஒத்த பொருளாம்.
  ‘நெஞ்சே!’ என்று தொடங்கி அருளிச்செய்யும் பொருள், எம்பெருமானார்
  நிர்வாகத்துக்கு ஒத்ததாகும்.