முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
59

னாய்த்தான் படுகிறேனோ!’ என்கிறார். உலகமெல்லாம் தாவிய அம்மானை - ஓர் ஊர்க்கு உதவின அளவேயன்றி, எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்துத் தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தனை. எங்கு இனித் தலைப்பெய்வன் - எங்ஙனம் கிட்டப் போகிறேன்? ‘அந்தத் 1தூளி தானத்துக்கும் தப்பின நான், 2பரீட்சை சொல்லிப் பெறப் போகின்றேனோ?’ என்கிறார் என்றபடி. இதனால், ‘அவன் தானே வந்து உதவி செய்தவன்று தப்பின யான், ஒரு சாதன விசேடத்தைப்பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ!’ என்று நசையறுகிறார்.

(9)

243

தலைப்பெய் காலம்
    நமன்தமர் பாசம்விட்டால்
அலைப்பூண் உண்ணும்அவ்
    வல்லல்எல் லாம்அகலக்
கலைப்பல்ஞா னத்துஎன்
    கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம்
    பெற்றது நீடுஉயிரே.

    பொ-ரை : யமனுடைய தூதுவர்கள் தலைப்படுகின்ற காலத்தில் பாசத்தை வீசினால், இங்கும் அங்கும் அலைக்கப்படுகின்ற அத்துன்பங்களெல்லாம் நீங்கும்படி, பல வகைப்பட்ட சாஸ்திரங்களின் ஞானத்தாலே அறியப்படுகின்ற என் கண்ணபிரானைக் கண்டுகொண்டு என் நெஞ்சம் நிலைபெற உயிரும் நிலைத்தது.

    வி-கு : பாசம் - கயிற்று வடிவமான ஓர் ஆயுத விசேடம். ‘அகலக் கண்டுகொண்டு நெஞ்சம் நிலைபெற உயிர் நீடுபெற்றது’ எனக் கூட்டுக. ‘நிலைப்பெற்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு. ‘பெற்றது நீடு உயிர்’ என்பதனை, ‘உயிர் நீடு பெற்றது’ என மாறுக.

____________________________________________________

1. ‘தூளி தானம்’ என்பது, ரசோக்தி; ‘ஸ்ரீ பாததூளி’ என்பது, நேர்ப்பொருள்;
  ‘பூரிதானம்’ என்பது தொனிப்பொருள்.

2. ‘பரீட்சை’ என்பதற்குச் ‘சாதன அநுஷ்டானம்’ என்பது, நேர்ப்பொருள்;
  ‘வேத சாஸ்திர முதலியவற்றின் பரீட்சை’ என்பது தொனிப் பொருள்.