முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
62

மான ஆத்துமாவிற்கு நாசமாவது, 1தாஸ்யாசித்தி; ‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தையொழிய நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.

(10)

244

உயிர்கள் எல்லா
    உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத்
    தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை
    ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை
    ஊனிடை ஒழிவிக்குமே.

    பொ-ரை எல்லா உயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனைக் குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த குற்றமில்லாத சொற்களையுடைய இசையுடன் கூடின மாலையாகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப்பாசுரங்களும் உயிருக்கு வந்தேறியாக உள்ள ஊன் பொருந்திய சரீரத்திலுண்டான சம்பந்தத்தைப் போக்குவிக்கும்.

    வி-கு : செயிர் - குற்றம். யாக்கை - எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது; சரீரம். ஊன் - தசை.

    ஈடு : முடிவில், 2தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட, ‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்; அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது. எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை - ‘இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லாவுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;

_________________________________________________     

1. தாஸ்யாசித்தி - தாஸ்யம் இல்லாமை. என்றது, ‘சேஷத்துவம் இல்லாமை’
  என்றபடி. சேஷமான பொருளுக்கு - ஆத்துமாவுக்கு. சேஷத்துவம்
  நிரூபகமானால் - சேஷத்துவத்தைக்கொண்டே
  நிரூபிக்கப்படவேண்டியிருந்தால். நிரூபகத்தை ஒழிய - அந்த சேஷத்துவத்தை
  ஒழிய. நிரூப்ய சித்தி இல்லை - நிரூபிக்கப்படுகின்ற ஆத்துமா இல்லை.
  என்றது, ‘சேஷத்துவம் இல்லையாம்போது ஆத்துமாவும் இல்லையாம்,’
  என்பது கருத்து.

2. இப்பாசுரத்திற்கு அவதாரிகை காணப்படவில்லை. இத்திருவாய்மொழி,
  கற்றார்க்குச் சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்பதனை
  அவதாரிகையாகக் கொள்க.