முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
74

காரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’

    நாம் - தம் திருவுள்ளத்தையுங்கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்; அன்றி, 1கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல். அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்: இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் 2கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?

    தெழி குரல் அருவி - கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. 3திருஅருவியின் ஒலியுங்கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு, அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது. 4‘சிலைக்கை வேடர் தெழிப்பு அறாத’ என்று திருவேங்கட யாத்திரை போகிறவர்களைப் பறிக்கிற வேடருடைய ஆரவாரமும் உத்தேஸ்யமாயிருக்கிறதன்றோ அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே? ஆக, அங்குத்தைத் திருவேடர் பறிக்கிற ஆரவாரமுங் கூட உத்தேஸ்யமாயிருக்கும்போது இவர்க்கு இந்தத் திருஅருவியின் ஒலியுங்கூட உத்தேஸ்யமாகச் சொல்லவேணுமோ? திருவேங்கடத்து எழில் கொள் சோதி - ‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்

__________________________________________________

1. ‘கேசவன் தமர்க்குப் பின்பு’ என்றது. ‘கேசவன் தமர்’ என்ற
  திருவாய்மொழியைப் பாடினதற்குப் பின்னர் என்றபடி.

2. கலவிருக்கை -ஓலக்கம், நெஞ்சு பொருந்தியிருத்தல், கொலுச்சாவடி. கலங்காப்
  பெருநகரம் - பரமபதம்.

3. ‘தம் உத்தேஸ்யத்தை விட்டு அருவிகளின் ஒலியை வருணிப்பது என்?’ என்ற
  வினாவைத் திருவுளத்தே கொண்டு, அதற்கு இரண்டு வகையில் விடை
  அருளிச்செய்கிறார், ‘திருஅருவியின் ஒலியும்’ என்று தொடங்கி.

4. பெரிய திருமொழி, 1. 7 : 2.