முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
83

காரியம் பார்ப்பவன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். 1‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான். ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால், ஆத்துமாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்தும குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி. ‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் 2இவ்வார்த்தை சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

    3வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி - ‘நித்தியசூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை வைத்தான். அவர்களுக்கு இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்: தன் இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்; பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார். இனி,

_______________________________________________________________________

1. ‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும்’ என்று தொடங்கும்
  வாக்கியத்தின் பொருளை ‘அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ
  ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி
  ‘அகதிம்’ என்ன, ‘நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி
  என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம். அனந்தாழ்வான் ‘அமர்யாத:’
  என்ற சுலோகத்தை ஆளவந்தார் அருளிச்செய்தார் என்னக் கேட்டு ‘எனக்கு
  அது சொல்ல வேண்டா’ என்றான்; அவர் சம்பந்தத்தாலே’ என வருகின்ற
  திருப்பாவை வியாக்கியானத்தால் உணரலாகும்.

(மாரி மலை முழைஞ்சில், நாலாயிரப்படி)

2. ‘இவ்வார்த்தை’ என்றது, ‘வானவர்க் கீசன்’ என்றதனை.

3. ‘வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்று கூட்டி
  இதற்கு மூன்று வகையாக பாவம் அருளிச்செய்கிறார். முதல் வகை,
  ‘நித்தியசூரிகளுக்கு’ என்று தொடங்குவது. இரண்டாம் வகை, ‘அவர்களுக்கு
  இருப்பு’ என்று தொடங்குவது. மூன்றாம் வகை, ‘பிராதம்யத்துக்கும்’ என்று
  தொடங்குவது. பிராதம்யம் - முதன்மை. செங்கல் சீரை - காஷாயம்.
  ‘பிராதம்யத்துக்கும்’ என்று தொடங்கும் வாக்கியத்தின் கருத்து, முதன்முதல்
  விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் என்பதற்காகவும் ‘முதல் மனைவிக்கு
  ஜீவனம் கொடுக்கவில்லை’ என்று உலகத்தார் கூறும் பழிச்சொற்களுக்காகவும்,
  காஷாய வஸ்திரம் தரித்துப் பிச்சை புக்காளாகில் தனக்கு மானக்கேடு
  உண்டாகுமே என்ற எண்ணத்தாலும் முதல் மனைவிக்கு ஜீவனோபாயத்துக்குச்
  சிறிது பொருள் கொடுப்பாரைப் போன்று என்பது. ‘பாசம் வைத்த’
  என்றதனால் நெஞ்சு கொடுத்தமை சொல்லிற்று; ‘பரஞ்சுடர்ச் சோதி’
  என்றதனால் உடம்பு தந்தது சொல்லிற்று.