முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
9

இல

இல்லாதவற்றையெல்லாம் இட்டுக்கொண்டு சொல்லப்படுகின்றவையெல்லாம். பெரும்பாலும் - மிகவும். ‘அனேகமாய்’ என்றபடி. பட்டு உரையாய் - பட்டது உரைக்கை, ‘நெஞ்சில் பட்டதைச் சொல்லுதல்: விஷயத்தைப் பாராமல் தோன்றியதைச் சொல்லுதல்’ என்றபடி. புற்கென்றே காட்டும் - புன்மையையே காட்டாநின்றது.

    ‘ஆயின், இவன் தோன்றியதைச் சொன்னானாய் விஷயத்தில் தீண்டாமலே 1இருக்குமாகில், அங்குத்தைக்குப் புன்மையே காட்டும்படி என்?’ என்னில், இரத்தினத்தை அறியாதான் ஒருவன், ‘குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது,’ என்றால், அவ்வளவே அன்றோ அவனுக்கு அதனிடத்தில் மதிப்பு? அவ்வழியாலே அதற்குத் தாழ்வேயாகும். அப்படியே, இவன் பண்ணும் துதிகள் இங்குத்தைக்குத் தாழ்வேயாக முடியும். இங்குத்தைக்குப் புன்மையாகக் காட்டுகைக்குக் காரணம் என்?’ என்னில், பரஞ்சோதீ - 2’நாராயணன் மேலான ஒளியுருவன்’ என்கிறபடியே, அவன் எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட சாதியான் ஆகையாலே.

(2)

225

பரஞ்சோதி நீபரமாய்
    நின்இகழ்ந்து பின்மற்றுஓர்
பரஞ்சோதி இன்மையின்
    படிஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே
    படர்உலகம் படைத்தஎம்
பரஞ்சோதி! கோவிந்தா!
    பண்புஉரைக்க மாட்டேனே.

    பொ - ரை : நீ எல்லாவற்றிலும் மேம்பட்டு மேலான ஒளியுருவனாயிருக்கின்றாய்; நின்னைத் தவிரப் பின்னர் வேறோரு மேலான ஒளி உருவமுடைய பொருளில்லாததனாலே உவமை நீங்கி நடக்கின்ற பரஞ்சோதியும் நீயே; பரந்த உலகங்களை எல்லாம் நின்னுள்ளே உண்டாக்கின பரஞ்சோதியே! கோவிந்தனே! உன் பண்புகளை உரைப்பதற்கு ஆற்றலுடையேன் அல்லேன்.

____________________________________________________

1. அங்குத்தை - அவ்விடம்.
2. தைத்திரீய நாராயண. அநு. 11.