முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
90

New Page 1

யுடன் கூடினவர்களாகவிருந்தாலும், 1சரீர சம்பந்தங்காரணமாகத் தொன்றுதொட்டு நாம் செய்து வைத்த, பகவானையடைவதற்குத் தடையாகவுள்ள கர்மங்கள் செய்வன என்?’ என்ன, ‘நாம் இதிலே துணியவே அவையெல்லாம் தாமாகவே நசிக்கும்,’ என்கிறார்.

    கடங்கள் வேம் - 2‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பிதிரர் கடனையும் தீர்க்கக் கடவன்,’ என்றும், 3‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோட்சத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோட்சத்தையடைய விரும்புகிறவன் கீழே விழுகிறான்,’ என்றும் சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள்வேம். ‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி. மெய்ம்மேல் வினை முற்றவும் - சரீரத்தின் சம்பந்தங்காரணமாக வருகின்ற பாவங்களைச் சொல்லுகிறது. ஆக, கடன்கள், மெய் மேல் வினை

__________________________________________________

1. ‘சரீர சம்பந்தங்காரணமாக’ என்றது முதல், ‘கர்மங்கள்’ என்றது முடிய, ஸ்ரீ
  ஆளவந்தார் நிர்வாஹத்தைப் பற்றிய அவதாரிகை. ‘வேங்கடத் துறைவார்க்கு
  நம என்ன வேம்’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘நாம் இதிலே துணியவே
  அவையெல்லாம் தாமே நசிக்கும்,’ என்கிறார். இதிலே - கைங்கரியத்திலே.

2. யஜூஷி காண்டம், 6.

3. மநு ஸ்மிருதி, 6 : 35. இவ்விடத்தில்.

      ‘இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள்
  முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார்
  கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின், அக்கடன்
  இறுத்தற்பொருட்டு நல் மக்களைப் பெறுதல்’ என்னும் பரிமேலழகருரை ஒப்பு
  நோக்கல் தகும். (புதல்வரைப் பெறுதல் - அவதாரிகை.)

  ‘வேள்வியிற் கடவுள் அருத்தினை கேள்வி
   உயர்நிலை உலகத் தையரின் புறுத்தினை
   வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
   இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
   தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்’

  என, நல்லிசைப்புலவரான கபிலர் பாடியிருத்தலும் ஈண்டு ஒப்பு நோக்கலாகும்.
  இப்பகுதியில் தேவர், முனிவர், தென்புலத்தார் என்ற மூவர் கடன்களையும்
  முறைப்படி முடித்தவன் என்று புகழ்ந்துள்ளமை காண்க. (பதிற்றுப் பத்து,
  70. 18-22)