முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
165

ஜீவனமாய். உழலாதார் - இதுவே வாழ்க்கையாக நடத்தாதார். தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே - ‘கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலுகிறவர்கள் நடுவே இவர்கள் பிறந்த இத்தால் இவர்கள் தாம்கொண்ட பிரயோஜனம் என்? வைஷ்ணவர்கள் நடுவே இவர்கள் மனித சரீரம் எடுத்தது என்ன பிரயோஜனத்துக்காக?’ என்கிறார் என்றபடி. 1‘திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக்கொண்டிருக்கச்செய்தே, கிராமணிகள், மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாறு போலேகாண்’ என்று பிள்ளைப்பிள்ளை அருளிச்செய்வர்.

(4)

271

சாது சனத்தை நலியும்
    கஞ்சனைச் சாதிப் பதற்கு
ஆதிஅம் சோதி உருவை
    அங்குவைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
    வீதிகள் தோறும்துள் ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
    என்சவிப் பார்மனி சரே?

    பொ-ரை : ‘நன்மக்களை வருத்திய கஞ்சனைக் கொல்லுவதற்காக ஆதியஞ்சோதியுருவை அங்கு இருக்கிறபடியே தன் பக்கலிலே வைத்துக்கொண்டு இங்கே பிறந்த வேதமுதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதவர்கள், ஓதி உணர்ந்த ஞானிகளுடைய சந்நிதியில் எதனை ஜபிப்பார்கள்? இவர்கள் மனிதர்களா? அல்லர்,’ என்றவாறு.

    வி-கு : ‘சாதிப்பதற்குப் பிறந்த வேதமுதல்வன்’ என்க. சாதித்தல் - கொல்லுதல்; ‘சா’ என்பது பகுதி. ‘தொறு என்பது, தான் சார்ந்த மொழிப்பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நிற்கும்,’ என்பர் சேனாவரையர். ‘சேரி தோறிது செல்வத் தியற்கையே’ என்பது சிந்தாமணி.      (செய். 129.) ‘தொறு’ என்பது, ‘தோறு’ என நீட்டல் விகாரம் பெற்று வந்தது. துள்ளாதார்: வினையாலணையும் பெயர். ‘மனிசரே’ என்பதில் ஏகாரம், எதிர்மறையின்கண் வந்தது.

_____________________________________________________ 

1. பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு
  இல்லாதவர்கள் நடுவே வந்தால் அவர்களுக்கு அஸஹ்யமாயிருக்கும் என்று
  கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு ஆப்த சம்வாதம் காட்டுகிறார்,
  ‘திருப்புன்னைக் கீழ்’ என்று தொடங்கி. பிள்ளைப்பிள்ளை - கூரத்தாழ்வான்
  சிஷ்யர்.