முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
247

என

என்றான் திருவடி. இதனால், ‘கோலின காரியத்தின் அளவல்ல இப்பாரிப்பு’ என்றபடி. பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும் போது அனந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் சர்வேசுவரன் நாற்றோளனாயோ, இருதோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, 1‘ஏகாயநர் இருதோளன் என்னாநின்றார்கள்; நம்முடையவர்கள் நாற்றோளன் என்னாநின்றார்கள்,’ என்ன, ‘இரண்டிலும் வழி யாது?’ என்ன, ‘இருதோளனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது; நாற்றோளன் என்று தோன்றிற்றாகில் பெருமாளைப் போலே இருக்கிறது,’ என்று அருளிச்செய்தார்; 2நம்மளவு அன்றியே தெரியக் கண்டவர்கள் ‘கையினார் சுரிசங்கு அனல் ஆழியர்’ என்றார்கள் அன்றோ பெரிய பெருமாளை?

    ‘ஆயின், சாதாரண மக்களுக்கு அங்ஙனம் தோன்ற இல்லையே?’ எனின், ஆயர் பெண்களுக்கு நான்காய்த் தோன்றி, உகவாத கம்சன் முதலியோர்களுக்கு இரண்டாய்த் தோன்றுமாறு

_____________________________________________________

 
இப்பாரிப்பு’ என்றது, ‘எத்தனித்த காரியத்தோடே நிற்குமதன்று மநோரதம்,’
  என்றபடி. கோலின காரியமாவது, வடிவழகு முதலானவைகளாலே சேதநரை
  வசீகரித்தல். ‘அது, ஆபரணச் சேர்த்தியாலும் கூடும்: அப்படியின்றிக்
  கேவலம் வடிவழகாலேயே ஆக வேண்டுமோ?’ என்றபடி. ‘என்னை
  வசீகரித்தலுக்கு அலங்கரித்தாலும் போதுமே? அலங்கரியாதே வைத்தது
  என்?’ என்பது திருவடியின் பாவம்.

      பரமபத்தனான திருவடி, முதன்முதல் தரிசிக்கும் போது ஸ்ரீ
  ராமபிரானுடைய திருமேனியில் நான்கு திருத்தோள்களைத் தரிசித்தான்;
  ஆதலால், அவனுடைய வார்த்தையான ‘ஆயதாஸ்ச’ என்ற சுலோகத்தில்
  ‘ஸாஹவ:’ என்ற பன்மைச்சொல்லை ஸ்ரீ வால்மீகி பகவான்
  பிரயோகித்துள்ளார் என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம்.

  ‘ஒன்றுஅல் லனபல தமிழ்நடை; வடநூல்
  இரண்டுஅல் லவைபல என்றிசி னோரே.’

  என்ற இலக்கணம் ஈண்டு நினைவிற்கோடல் வேண்டும். தம் திருவுள்ளக்
  கருத்துக்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘பட்டர் திருக்கோட்டியூரிலே’ என்று
  தொடங்கி. அன்றியே, ‘பாசுரத்தில் ‘நான்கு’ என்றிருப்பதற்கு ஐதிஹ்யம்
  காட்டுகிறார்’, என்னலுமாம்.

1. ஏகாயநர் - துவைதிகள். பெரிய பெருமாள் - திருவரங்கத்தில்
  எழுந்தருளியிருக்கின்ற இறைவன். பெருமாள் - ஸ்ரீ ராமபிரான்.

2. ‘ஆயின், பெரிய பெருமாள் நாற்றோளராய்த் தோன்றின இடம் உண்டோ?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நம்மளவன்றியே’ என்று
  தொடங்கி. ‘கையினார் சுரிசங்கு’ என்பது, அமலன் ஆதிபிரான், 7.