முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
11

    நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் பரஞ்சோதி - உன்னுடைய சங்கற்பத்தின் மிகச்சிறியதொரு கூற்றிலே காரியத்தின் உருவமாகி விரிந்து நின்றுள்ள உலகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி. ‘தனக்குங்கூட உரியன் அல்லாதான் ஒருவனை, ‘நீயேயன்றோ நாட்டுக்கெல்லாம் உரியவன்?’ என்று கூறுவர்களன்றே? அங்ஙனல்லன் இறைவன்,’ என்பார், ‘நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி’ என்கிறார். இனி, இதற்கு, ‘உனக்கு மகன் பிறந்தான்’ என்னுமாறு போன்று, உலகங்களை யுண்டாக்கின பின்னர்த் திருமேனியிலே பிறந்த புகரையுடையவன் என்று பொருள் கூறலுமாம். ஆக, சுவாபாவிகமான மேன்மை அது; காரணனாயுள்ள தன்மையால் வந்த புகர் இது; இப்படியிருக்கிற மேன்மையை எல்லை காணிலும், நீர்மை தரை காண ஒண்ணாததாயிருக்கிறதே!’ என்கிறார் மேல்: கோவிந்தா பண்பு உரைக்க மாட்டேன் - உன்னுடைய தன்மையை என்னால் சொல்லப் போகாது; அனுபவித்துப்போமித்தனை. ‘கோவிந்தா’ என்றதனால் அவனுடைய சௌலப்பியம் தோற்றுகின்றது. ‘ஏன் சொல்லப்போகாது?’ எனின், 1’நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னுமீனச்சொல்,’ என்கிறபடியே, நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது கூறுதற்குதான் முடியுமோ?

(3)

226

மாட்டாதே ஆகிலும்இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டுஆய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய்; மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய்; மாஞாலம் வருந்தாதே?

    பொ-ரை : ‘பரந்த இடத்தையுடைய பெரிய இந்த உலகமானது உன்னுடைய மலர் போன்று மெல்லிய திருவுருவத்தை மனத்தின்கண் வைத்துத் தியானிக்கமாட்டாது; அதற்குமேல், திருவுருவத்தைத் தியானிக்கவொண்ணாதபடி பல சமய மதி வேறுபாடுகளையும் உண்டாக்கினாய்; உண்டாக்கி, நீ மலர்களையுடைய திருத்துழாயினிடத்தில் விருப்பத்தைச் செலுத்தினாய்; இங்ஙனமிருப்பின், இப்பெரிய பூவுலகமானது வருந்தாதோ? வருந்தும்,’ என்றபடி.

____________________________________________________

1. நினைக்கப் போகாமைக்குக் காரணத்தைக் கிம்புனர் நியாயத்தாலே
  சாதிக்கிறார், ‘நெஞ்சால்’ என்று தொடங்கி. இப்பாசுரம், திருவிருத்தம், 98.