முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
241

மற

மற்றும், இவ்விஷயத்தில் அனுபவித்த அழகை நோக்க அனுபவிக்கும் அழகு, 1‘முத்தன் இச்சரீரத்தை நினையாதவனாகி’ என்கிறபடியே, முத்தன் சமுசார வாழ்க்கையை மறக்குமாறு போன்று, அனுபவித்த தன்மையை நினைக்க ஒண்ணாதபடி அன்றோ இருப்பது? ஆதலால் அன்றோ, 2‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த ஆலிநாடரும்? என்றது, ‘முதல் நாள் கண்டால், இயற்கையில் அமைந்த இறைமைத்தன்மையாலும் முகத்தில் தண்ணளியாலும் ஆக, காணாது கண்டவனுக்கும் ‘பண்டு கண்டு விட்ட முகமோ?’ என்று தோன்றியிருக்கும்; சில நாள் பழகினால், ‘பண்டு இவரை நாம் கண்டு அறியோமே!’ என்று தோன்றியிருக்கும்’ என்றபடி.

    ‘ஆயின், 3இரண்டற்கும் சொல் ஒத்திருக்க, இப்பொருளைக் காட்டும்படி எங்ஙனே?’ என்று நான் கேட்டேன்; ‘பயில்கின்றாளால்’ என்று முதல்முன்னம் பார்த்த நிலையோடு பார்த்துப் பின்னர்க் கலங்கிய நிலையோடு வேற்றுமை அற வார்த்தை இதுவேயாய் இருந்தது கண்டீரே’ என்று அருளிச்செய்தார். ‘வடிவழகு குறை அற்றுக் குணத்தில் கொத்தையாலே கிட்ட வொண்ணாதபடி இருப்பானோ?’ என்னில், ‘கலங்காப் பெரு நகரத்தை இருப்பிடமாக உடையவன் திருப்பாற்கடலிலே வந்து அடைகின்றவர்கட்கு முகம் கொடுக்கைக்கு ஒருப்பட்டிருக்கின்றான்,’ என்பார், ‘நம் பாற்கடற்பரமனை’ என்கிறார். ‘நம்’


_____________________________________________________


1. சாந்தோக்யம், 8. 12 : 3.

2. பெரிய திருமொழி, 8. 1 : 9. இது, ‘நித்தியப் பிராப்யம்’ என்றதற்குப்
  பிரமாணம். ‘எவ்வூரில்?’ என்றால், ‘எங்கேயோ கண்டது
  போன்றிருக்கின்றதே!’ என்றும், ‘எங்கே கண்டோம்? ஓரிடத்திலும்
  கண்டதில்லையே!’ என்றும் இரு வகையான பொருளும் தோன்றுகையாலே,
  அவ்விருவகையான அர்த்த விசேடத்தையும் அருளிச்செய்கிறார். ‘முதல்
  நாள் கண்டால்’ என்று தொடங்கி.

3. ‘இரண்டற்கும் சொல் ஒத்திருக்க’ என்றது, ‘கண்டறிவோம், கண்டறியோம்’
  என்ற இரண்டற்கும் ‘எவ்வூரில்’ என்ற சொல் ஒத்திருக்க என்றபடி.
  ‘இவ்வர்த்தத்தை’ என்றது, ‘முதல் நாள் காணும் காட்சியிலே கண்டறிவோம்’
  என்றும், பின்னர்க் காணும் காட்சியிலே ‘கண்டறியோம்’ என்றும்
  கூறப்படும் இவ்வர்த்தத்தை’ என்றபடி. ‘நான் கேட்டேன்’ என்றது,
  நம்பிள்ளையைக் குறித்தது. ‘அருளிச்செய்தார்’ என்றது, நஞ்சீயரை.