முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
271

    வி-கு : இப்பாசுரத்தால் சாதிகள் நான்கு உள என்பது ஆழ்வார் திருவுள்ளமாதல் காண்க. ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே,’ என்பது புறநானூறு. ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் நான்கு வருணங்களைக் கூறியிருத்தல் ஈண்டு நினைவு கூர்க. ‘நலந்தான் எத்தனை இலாத’ என மாறுக. இது, சண்டாளர்களுக்கு அடைமொழி. ‘எத்தனை’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருளது. ‘எத்தனையும்’ என்ற உம்மை தொக்கது.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.

    குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து - 2முறைப்படி நடக்கும் விவாகத்தாலும் அநுலோம பிரதிலோம விவாகத்தாலும் உள்ள குலங்களைத் தரிப்பதான பிராஹ்மண வருணம் முதலான நான்கு பிறவிகளிலும் கீழே கீழே போய். எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்-அந்தச் சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞான ஒழுக்கங்கள் இன்றியே இருப்பாருமாய், ‘சண்டாளர்’ என்றால் நாம் நோக்காமல் போமாறு போன்று அந்தச் சண்டாளர்களும் விலகிச் செல்லக் கூடியவர்களாகிலும். ‘இவர்கள் உத்தேஸ்யர் ஆகைக்கு என்ன 3வலக்குறி உண்டு?’
_____________________________________________________

1. ‘வலந்தாங்கு சக்கரத் தண்ணல்’ என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. முறைப்படி நடக்கும் விவாகமாவது, ஒவ்வொரு சாதியினரும் அவ்வச்சாதியில்
  செய்துகொள்ளும் மணம். அநுலோம விவாகமாவது, மேல் சாதியினன்,
  தனக்குக் கீழ்ப்பட்ட சாதிகளில் செய்துகொள்ளும் மணம். பிரதிலோம
  விவாகமாவது, கீழ்ச்சாதியினன், தனக்கு மேற்பட்ட சாதிகளில்
  செய்துகொள்ளும் மணம். கலைக்கோட்டு முனிவர் பக்கலிலும், யயாதி
  பக்கலிலும் காணலாம்.

  ‘உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும்
  வியந்த கூட்டத் தவர்அநு லோமர்.

  ‘உயர்ந்த பெண்ணினும் இழிந்த ஆணினும்
  வியந்த கூட்டத் தவர்பிரதி லோமர்.’

  என்பன பிங்கலந்தை.

(ஆடவர் வகை, 242, 243)

3. வலக்குறி - வலப்பக்கத்தில் திருவாழி: அன்றி, அடையாளம்.

 
    விருத்தவான்கள் - ஆசாரமுடையவர்கள்; அல்லது, திருவாழியை
  ரக்ஷகமாகவுடையவர்கள். ‘கைமேலே’ என்பது சிலேடை.