முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
276

கின்றானோ’ என்கிறபடியே, இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின். ‘அருள் செய்த’ என்கிறார். நெடியோனை - பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும், ‘நிறைவு பெறாத மனத்தையுடையவனாய் இருக்கிறேன்,’ என்கிறபடியே, ‘அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப்பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.

    தென்குருகுகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் - ஆழ்வார் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேசுவரனுக்கு. அடி ஆர்ந்த ஆயிரத்துள் - இருக்கு வேதம் போலவும், 1‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம். அவன் தொண்டர்மேல் முடிவு இவை பத்து - 2இதில் சர்வேசுவரனைச் சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜன கோடியிலேயாமித்தனை. ஆரக்கற்கில் - நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில். இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல். சன்மம் செய்யாமை முடியும் - அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல் அறும்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        பயிலும் திருமால் பதந்தன்னில் நெஞ்சம்
        தயலுண்டு நிற்கும் ததியர்க்கு - இயல்வுடனே
        ஆளானார்க்கு ஆளாகும் மாறன் அடியதனில்
        ஆளாகார் சன்மமுடி யா.

   
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________

1. ஸ்ரீராமா. பால. 2 : 18.

2. இத்திருவாய்மொழியில் சர்வேசுவரனையும் அருளிச்செய்திருக்க, ‘இவை
  பத்தும் அவன் தொண்டர்மேல் முடிவு’ என்று கூறல் பொருந்துமோ?’
  என்னும் வினாவிற்கு விடையாக, ‘இதில் சர்வேசுவரனை’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். உபசர்ஜ்ஜன கோடியிலேயாமித்தனை -
  முக்கியமில்லாமையிலே சேருமித்தனை. ‘கல்வியிற்பெரியன் கம்பன்;
  தெய்வப் புலவன் திருவள்ளுவன்’ என்பன போன்று அடியார்கட்கு
  விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன இத்தனை என்றபடி.