முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
304

பெ

    பொ-ரை : ‘மஹாபலி! நான் கொள்வேன்; மூவடி மண்தா,’ என்ற கள்வனே! கம்ஸனைக் கொன்று, வாணனுடைய மனவலிமை தீரும்படி ஒப்பற்ற ஆயிரம் தோள்களையும் துணித்த கருடவாகனனே! உன்னை எப்பொழுது சேர்வேன்?

    வி-கு : ‘மூவடி’ என்றது, மூவடி மண்ணினைக் குறித்தது. ‘வஞ்சித்துத் துணித்த புள் வல்லாய்’ என்க. புள் வல்லாய் - புள்ளைச் செலுத்துவதில் வல்லவனே.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘பாதுகாப்பதற்கு உரிய உபாயத்தை உடையனுமாய் விரோதிகளை அழிக்கிற சீலனுமான உன்னை நான் கிட்டுவது என்று?’ என்கிறார்.

    கொள்வாள் - 2மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று. அன்றிக்கே, இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு ‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி; ‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான் என்னுதல். நான் - 3உன்பக்கல் பெற்றால் அன்றி ஓர் அடி இடாத நான். மாவலி - 4பிறந்த அன்றே பிக்ஷையிலே

___________________________________________________

1. ‘கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனைத் தோள் துணித்த புள்
  வல்லாய்! எஞ்ஞான்று பொருந்துவன்?’ என்ற பதங்களைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘கொள்வன்’ என்றதற்கு மூன்று வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
  முதல் கருத்து, ‘நீ தாராவிட்டாலும், நான் கொள்வன்,’ என்பது. ‘மலையாளர்
  வளைப்புப் போலே’ என்றது, ‘மலையாளர் ஒருவர் பக்கல் ஒன்றை வாங்க
  நினைத்தால் வாங்கியல்லது போகாராய் வளைத்துக்கொள்வர்கள்; அது
  போன்று’ என்றபடி, இரண்டாவது கருத்து, வாமனனுடைய உயர்ச்சியிலே
  நோக்கு; மூன்றாவது கருத்து, அவனுடைய விருப்பம் இன்மையிலே நோக்கு.

3. முதல் கருத்துக்குச் சேர ‘உன் பக்கல் பெற்றாலன்றி’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.

4. ‘இரக்கப் புக்கவன், ‘மஹா ராஜாவே!’ என்ன வேண்டாவோ? ‘மாவலி!’
  என்று அவன் பெயரைச் சொல்லக் கூடுமோ?’ என்னும் வினாவிற்கு
  விடையாகப் ‘பிறந்தவன்றே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.