முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
333

New Page 1

போரும்’ என்பார், ‘பாடினால்’ என்கிறார். இனி, முடி இறைவனுக்கே அடை ஆகும்போது, ‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை.

    தன்னாகவே கொண்டு - 1‘என்னுடைய உருவம் முதலானவைகளை அடைந்தவர்கள்’ என்றும், 2‘மேலான ஒப்புமையை அடைகிறார்கள்’ என்றும், 3‘தம்மையே ஒக்க அருள்செய்வர்’ என்றும் கூறப்படுகின்றவாறே தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கே உரியவனாகக் கொண்டு’ என்னுதல். சன்மம் செய்யாமையும் கொள்ளும் - பின்னர் ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும். கவி பாடுகைக்கு அடி பிறவி ஆதலின், ‘சன்மம் செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார். அரசபுத்திரன் தலையில் முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டி விடுமாறு போன்றும், ஸ்ரீ விபீஷணாழ்வானை முடி சூட்டிப் பின்பு இராவணனைக் கொன்றாற்போலவும், நித்திய சூரிகள் தரத்தைக் கொடுத்துப் பின்னை சமுசார சம்பந்தத்தை அறுப்பான் ஆதலின், ‘தன்னாகவே கொண்டு சன்மஞ்செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார்.

(4)

315

    கொள்ளும் பயன்இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
    வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
    கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றுஎல் லாம்தரும் கோதுஇல்என்
    வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவிசொல்ல வம்மினோ.

   
பொ-ரை : நீங்கள் அடையக்கூடிய பயன் ஒன்றும் இல்லை; குப்பையைக் கிளறினாற்போன்ற இழிக்கத் தக்கதான செல்வத்தை மிக அதிகமாகப் புகழ்ந்து உங்களுடைய வாக்கின் வன்மையை இழக்கின்ற புலவீர்காள்! கவி பாடுதற்குப் பொருளாகக் கொள்ளுவதற்கு வேண்டிய குணங்கள் எல்லாம் குறைவு இல்லாதவன்; நீங்கள் விரும்பின அனைத்தையும் தருவான்; குற்றம் இல்லாத வள்ளல்; மணி போன்ற நிறத்தையுடையவனான இறைவனைக் கவி சொல்ல வாருங்கள்.

    வி-கு :
இரண்டாம் அடியில் ‘வள்ளல்’ என்பது, புகழ்ச்சியின் மிகுதியைக் குறிக்க வந்தது. வேண்டிற்றெல்லாம் - ஒருமை பன்மை மயக்கம்.

____________________________________________________

1. ஸ்ரீ கீதை, 14 : 2.
2. முண்டகோபநிடதம்
3. பெரிய திருமொழி, 11. 3 : 5.