முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
370

பெ

    பொ-ரை : அநிருத்தனைச் சிறை வைத்த அக்காலத்தில் ‘வாணாசுரனைத் துன்பம் இன்றிப் பாதுகாப்போம்’ என்று கூறிப் படையோடும் எதிர்த்து வந்த சிவபெருமானும் அவனுடைய மகனான சுப்பிரமணியனும் அதற்கு மேலே நெருப்பும் போரிலே அழியும்படியாக, பொருகின்ற சிறகுகளையுடைய கருடப்பறவையை ஏறிச் செலுத்திய மாயனை, ஆயனை, அழகிய சக்கரத்தையுடைய அரியினை, அடியார்களை நழுவவிடாதவனைப் பற்றி யான் சிறிதேனும் துன்பம் இல்லாதவன் ஆனேன்.

    வி-கு :
காத்தும் - ஒருமையின்கண் வந்த உயர்வுப்பன்மை. ‘தொலையக் கடாவிய மாயனை’ எனக்கூட்டுக. இலன் - குறிப்பு வினைமுற்று.

    ஈடு :
நான்காம் பாட்டு. 1‘வேறு தேவர்களைப் பற்றினார்க்கு அவர்கள் தஞ்சம் அல்லர் என்னுமிடத்தையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் விட்டுக்கொடான் என்னுமிடத்தையும் காட்டின இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

    ‘பரிவு இன்றி வாணனைக் காத்தும்’ என்றது, 2அநிருத்தாழ்வான் நிமித்தமாகக் கிருஷ்ணன் படை எடுத்துப் புறப்பட்ட அளவில், வாணன் சிவபிரான் பக்கலிலே சென்று, ‘கிருஷ்ணன் நமக்கு எதிரியாக வருகிறான்,’ என்று சொன்னவாறே, ‘தலையில் வைத்த பூ வாடாமல் வருத்தம் அற வாணனைக் காக்கக் கடவோம்’ என்று சொன்னான் ஆயிற்று, வீட்டிற்குள்ளே இருந்து தம்தம் வீரத்தைப் பேசுவோரைப் போலே; 3இச்சக்கரவர்த்தி திருமகன் ‘என்னை அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு

____________________________________________________

1. ‘போர் தொலைய, புள்ளைக் கடாவிய அச்சுதனை’ என்பதனைக்
  கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. வாணன், ‘என்னைக் காக்க வேண்டும்’ என்ற போது சிவன் செய்த
  சூளுறவைத் துச்சீகரிக்கிறார், ‘அநிருத்தாழ்வான் நிமித்தமாக’ என்று
  தொடங்கி. அநிருத்தாழ்வான் - கிருஷ்ணனுக்குப் பேரன்; பிரத்தியும்நனுக்கு
  மகன்.

3. ‘வீரம் பேசும் அளவேயோ? அவனுக்கு ஆற்றல் இல்லையோ?’ எனின்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இச்சக்கரவர்த்தி திருமகன்’ என்று
  தொடங்கி. ‘என்னை அடைந்தவர்களை’ என்று தொடங்கும்
  பொருளையுடைய சுலோகம், ஸ்ரீராமா. யுத். 18 : 33.

  மற்றினி உரைப்ப தில்லை; மாருதி வடித்துச் சொன்ன
  பெற்றியே பெற்றி; அன்னது அன்றெனில் பிறிதொன் றானும்
  வெற்றியே பெறுக தோற்க; வீக வீயாது வாழ்க;
  பற்றுத லன்றி உண்டோ புகல்எமைப் பகர்கின் றானை?’

  என்றார் கம்பநாட்டாழ்வார்.

(விபீடண. 108.)