முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
100

1ப

1பிராப்தியைச் சொல்லிற்று. அஞ்சலி மாத்திரத்தாலே சாதிக்கப்படு பொருள் என்கிறார் மேல்: குரைகழல் கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே - ‘உன் திருவடிகளிலே கைகூப்பி வணங்கினவர்கள் உன்னைக் கூட நின்ற மாயனே’ என்னுதல். அன்றிக்கே, ‘கைகூப்புவார்கள் குரை கழல்கள் கூட நின்ற மாயனே’ என்று கொண்டு கூட்டி, ‘உன்னைக் கைகூப்புவார்கள் குரைகழல்கள் கூட நின்ற மாயனே’ என்னுதல். திருவடிதான் அஞ்சலிக்கு விஷயமுமாய் அஞ்சலியினாலே சாதிக்கப்படுகின்ற பொருளுமாய் அன்றோ இருப்பது? 2இந்திரனுக்கு இராச்சியம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளில் அழகு கூறுபட்டதாதலின், ‘குரை கழல்கள்’ என்கிறார். ‘அவனுக்குச் சாதனமானது இவர்க்குச் 3சாத்தியம் ஆயிற்று,’ என்றபடி.

    மாயனே - 4‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி இருப்பதே! இது என்ன ஆச்சரியந்தான்!’ என்கிறார். விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் - வாசனையையுடைத்தான பூவையும் நீரையும் கொண்டு 5‘எல்லாமாய் இருக்கிற பூமியைப் பனி போன்று குளிர்ந்திருக்கின்ற தண்ணீரால் நனைக்கட்டும்; பின்னர், மற்றவர்கள் எங்கும் பொரிகளாலும் மலர்களாலும் வாரி இரைக்கக் கடவர்கள்,’ என்கிறபடியே. வகுத்த அடிமை செய்யமாட்டிற்றிலனேயாகிலும். என்றது, ‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி நீ இருந்தால், அறிவுள்ள ஒருவன் மலர் முதலான

_____________________________________________________

1. ‘திருவடிகளை நீட்டி உலகத்தையெல்லாம் திருவடிகளின்கீழே
  இட்டுக்கொள்ளுகையாலே, ‘பிராப்தியைச் சொல்லிற்று’ என்கிறார். பிராப்தி -
  சம்பந்தம்.

2. ‘குரை’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இந்திரனுக்கு’
  என்று தொடங்கி. ‘குரை’ என்றது அழகாய், அழகால் வந்த பரப்பைச்
  சொல்லுகையாலே ‘அழகு கூறப்பட்டது’ என்கிறார்.

3. பூமியை அளந்துகொண்டு அவனுக்குச் சாதித்துக் கொடுக்கையாலே
  ‘அவனுக்குச் சாதனமான திருவடிகள்’ என்கிறார். சாத்தியம் - பேறு;
  அல்லது, பலம்.

4. ‘மாயனே’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘அஞ்சலி
  மாத்திரத்தாலே’ என்று தொடங்கி.

5. ஸ்ரீ ராமா. யுத். 130 : 6.