முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
112

366

366

        மண்ணை இருந்து துழாவி,
            ‘வாமனன் மண்இது’ என்னும்;
        விண்ணைத் தொழுது, அவன் மேவு
            வைகுந்தம்’ என்றுகை காட்டும்;
        கண்ணைஉண் ணீர்மல்க நின்று,
            ‘கடல்வண்ணன்’ என்னும்;அன் னே!என்
        பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
            என்செய்கேன், பெய்வளை யீரே!

    பொ-ரை : அணிந்த வளையல்களையுடைய பெண்காள்! இருந்து
பூமியைத் துழாவி, ‘இது வாமனனுடைய பூமியாகும்,’ என்பாள்; ஆகாயத்தை நோக்கித் தொழுது, ‘அவன் எழுந்தருளியிருக்கின்ற பரமபதம்’ என்று கை காட்டுவாள்; கண்களில் நீர் பெருகும்படி நின்று ‘கடல் போன்ற நிறத்தையுடையவன்’ என்பாள்: ஐயோ! என்னுடைய பெண்ணைப் பெரிய மயக்கத்தை அடையச் செய்தவர்க்கு எதனைச் செய்வேன்?

    வி-கு : ‘என்னும், காட்டும், என்னும்’ என்பன, செய்யும் என் முற்றுகள். ‘கண்ணை’ என்பதில், ஐகாரம் அசைநிலை, உருபு மயக்கமாகக் கோடலும் அமையும். ‘அன்னே’ என்பது, அந்தோ என்னும் பொருளைக் காட்டுவதோர் இடைச்சொல். ‘அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற் கடுத்தநாள் அரக்கர் வேந்தள். பின்னேயோ’ (கம்ப. உயுத். இராவணன் வதைப். 288.) என்றவிடத்தும் ‘அன்னே’ என்பது இப்பொருளதாதல் காணலாகும்.

    இத்திருவாய்மொழி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

    ஈடு : முதற்பாட்டு. 1வினவ வந்தவர்களுக்குத் தன் மகள் செய்தியைக் கூறுகின்ற தாயானவள், ‘இப்படி இவளை எம்பெருமான் பிச்சு ஏற்றினான்; நான் இதற்கு என் செய்வேன்?’ என்கிறாள்.

    மண்ணை இருந்து துழாவி - 2‘மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ என்கிறபடியே, அவன் திருவடிகளுக்கு

_____________________________________________________

1. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. திருநெடுந்தாண்டகம், 5.