முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
117

மாட்டாத பருவமாயிற்று இவளது. பெருமயல் செய்தார்க்கு - 1‘தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்றுகாணும் இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள். அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ? என் செய்கேன் - 2இவள் ஆற்றாமை தீர அவனை வரச் செய்யவோ? ‘அவன் வருமளவும் கிரமத்திலே அடையலாம் என்று பார்த்து ஆறி இருக்க வேண்டுங்காண் என்று இவளைத் தரிப்பிக்கவோ? யாது செய்வேன்? பெய்வளையீரே! 3பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய் இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள். அன்றிக்கே, ‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ, நானும் கைமேல் செய்து பார்க்க!’ என்பாள், அங்ஙனம் விளிக்கின்றாள் என்னலுமாம்.      

(1)

367

        பெய்வளைக் கைகளைக் கூப்பி,
            ‘பிரான்கிடக் கும்கடல்’ என்னும்;
        செய்யதுஓர் ஞாயிற்றைக் காட்டி,
            ‘சிரீதரன் மூர்த்திஈது’ என்னும்;
        நையும்கண் ணீர்மல்க நின்று,
            ‘நாரணன்’ என்னும்; அன் னே!என்
        தெய்வ உருவிற் சிறுமான்
            செய்கின்றது ஒன்றுஅறி யேனே.

_____________________________________________________

1. ‘தம்மைக் கலந்து பிரிந்தார்’ என்றது, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியையும்
  சீதாபிராட்டியையும் சுட்டுகிறது. ‘அவர்கள் இருவரும் இப்படிக்
  கலங்கவில்லையே’ என்பது கருத்து. ‘இவளுக்கு வேறுபாடு யாது?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவனை ஒத்த’ என்று தொடங்கி.

2. அவன் ஸ்வதந்தரனாகையாலும், இவள் ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’
  என்கிறபடியே, மிகப்பெரிய காதலையுடையவளாகையாலும் இரண்டும்
  தன்னால் இயலா என்பது கருத்து.

3. ‘பெய்வளையீரே!’ என்று விளிக்கின்றவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘பெருவெள்ளத்திலே’ என்று தொடங்கி. தொங்குகை -
  தங்குதல். ‘கைமேலே’ என்றது, ரசோக்தி.