New Page 2
பொ-ரை :
‘வளையல்களை அணிந்த கைகளைக் குவித்து, ‘பெருமான் கிடக்கின்ற கடல்’ என்பாள்; ஒப்பற்ற சிவந்த
சூரியனைக் காட்டி, ‘திருமகள்கேள்வனுடைய உருவம் இது,’ என்பாள்; கண்களில் நீர் பெருகும்படி நின்று
வருந்துவாள்; ‘நாராயணனே!’ என்பாள்; அந்தோ! தெய்வத்தன்மை பொருந்திய உருவத்தையுடைய சிறிய
மான்போன்ற என்னுடைய பெண்ணானவள் செய்கின்ற காரியங்களைச் சிறிதும் அறிகின்றிலேன்,’ என்கிறாள்.
வி-கு :
நையும் - முற்று; எச்சமுமாம். ‘அன்னே’ என்பதற்கு முன்னர் உரைத்தாங்கு உரைக்க. மான் - உவமையாகு
பெயர். ஒன்று - சிறிது என்னும் பொருளையுடையது; எண்ணுப் பெயருமாம்.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1‘தெய்வ உருவினையுடைய இவள் செய்கின்றது ஒன்றும் தெரிகின்றது
இல்லை,’ என்கின்றாள்.
பெய் வளைக்கைகளைக்
கூப்பி - 2அவனைத் தொழுவித்துக்கொள்ளும் கருவியையுடையவள் தான் தொழா நின்றாள்.
அவனைத் தொழுவித்துக் கொள்ளுதற்குப் போலே காணும் கையில் வளை இட்டது. கையில் பிரஹ்மாஸ்திரம்
இருக்கப் படும் பாடே இது. ‘வீரக்கழலோடே பட்டுக் கிடப்பாரைப் போலே அன்றோ இவள் கிடக்கின்ற
கிடை?’ என்கிறாள் என்றவாறு. ‘ஆயின், பிரிந்திருக்கும் நிலையில் கைகளில் வளையல்கள்
உளவோ?’ எனின், ‘கடல் வண்ணன்’ என்றவாறே கழன்ற வளையல்கள் ஒழியச் சரிந்த வளையல்கள்
பூரித்தனகாணும். இங்ஙனம் நோவுபடாநிற்கச்செய்தே கடலோசை வந்து செவியில் படுமே! பிரான் கிடக்கும்
கடல் என்னும் -‘திருப்பாற்கடலிலே சாய்ந்தால் நம் வருத்தத்திற்குக் கடுக உதவ ஒண்ணாது என்று,
அணித்தாக 3இந்தக் கடலிலே சாய்ந்தருளின மஹோபகாரகன்’ என்பாள். இப்படி இரவு
எல்லாம் கடல் ஓசையோடே அலைந்து, விடிந்தவாறே சூரியன் வந்து
_____________________________________________________
1. ‘தெய்வ உருவின் சிறுமான்’
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘பெய்வளை’ என்று வைத்துக்
‘கைகளைக்கூப்பி’ என்கிறவளுடைய
மனக்கருத்தை அருளிச்செய்கிறார், ‘அவனை’ என்று தொடங்கி.
‘பிரஹ்மாஸ்திரம்’ என்றது, ஈண்டு வளையல்களை.
3. ‘இந்தக்
கடல்’ என்றது, ‘நீலக்கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றியாதல்;
‘இதுவும் கடலன்றோ? இங்கேயும்
கிடவானோ?’ என்றிருக்கிறாள் என்று திருவுள்ளம் பற்றியாதல்.
|