முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
121

New Page 1

    பொ-ரை : ‘சுடும் தன்மையது என்று எல்லாராலும் அறியப்படுகின்ற சிவந்த நெருப்பைத் தழுவி, ‘அச்சுதனே!’ என்று சொல்லுவாள்; உடம்பு வேகின்றிலள்; வீசுகின்ற குளிர்ந்த காற்றைத் தழுவி, ‘என்னுடைய கோவிந்தனே!’ என்பாள்; வாசனையையுடைய திருத்துழாய் மலரின் நறுமணம் வீசாநின்றாள்; மஹா பாவியாகிய யான் பெற்ற செறிந்த வளையல்கள் பொருந்திய முன்கையினையுடைய சிறிய மான் போன்ற என் பெண்ணானவள் செய்கின்ற செயல் என் கண்களுக்கு ஒன்றா? அன்று; பல,’ என்கிறாள்.

    வி-கு : ‘பெற்ற சிறுமான்’ என்க. செய்கின்றது - வினையாலணையும் பெயர். ‘ஒன்றே’ என்பதில் ஏகாரம் : எதிர்மறை.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1இவளுடைய அதியான செயல்களைச் சொல்லப்புக்கு, ‘அவற்றிற்கு எண் இல்லை’ என்கிறாள்.

    அறியும் - ‘ஒன்றால் அவிக்க ஒண்ணாது, எரிக்குந் தன்மையது’ என்று எல்லாராலும் அறியப்படுகின்ற. அன்றிக்கே, ‘இவள் தானும் இப்படி மயங்குவதற்கு முன்பு எரிக்குந்தன்மையது என்று அறிந்து நீக்கிப் போந்தது’ என்னுதல். செந்தீயைத் தழுவி - எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்; ‘மந்திரம் மருந்து முதலியவைகளால் தடைசெய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்றுதான் தழுவுகிறாளோ?’ 2‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவாநின்றாள். அன்றிக்கே, 3‘பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ என்னுமாறு போன்று, இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சார்த்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல். அச்சுதன் என்னும் - 4‘உடைமையை மங்கக் கொடாமைக்காக

_____________________________________________________

1. ‘இவள் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘அதி’ என்பது, மிகுதியைக் காட்டுவதோர்
  இடைச்சொல். (636ஆம் குறள் காண்க.)

2. ‘செந்தீக்கு அச்சுதனோடே ஒப்புமை இருந்துதானே தழுவ வேண்டும்?
  எவ்வகையாலே ஒப்புமை?’ என்ன, அதற்கு இரண்டு வகையாக விடை
  அருளிச்செய்கிறார், ‘ஒளிகளின் நிலையான திரள்’ என்று தொடங்கி. இது,
  ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63.

3. திருவாய்மொழி, 8. 9 : 3. மாணிக்கப்படி - இரத்தினாங்கி;
  இரத்தினத்தாலாய சட்டை.

4. அச்சுதன் என்பதற்கு, ‘அடியார்களை நழுவவிடாதவன்’ என்பதும்
  பொருளாதலின், அதனைத் திருவுள்ளம் பற்றி, ‘உடைமையை’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார்.