முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
128

New Page 2

பெருமையைக் கண்டவாறே, ‘உலகம் முழுதையும் தன் திருவடிகளின்கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம். அங்ஙன் அன்றிக்கே, 1சீயர், ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே? அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று, ‘யானைக் கூட்டத்துக்குக் கதவு இடில் அன்றோ உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,

    நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் - 2கெட்டு மழை  அன்றிக்கே பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழையைக் கண்டவாறே, ஒரு காரணம் இன்றியே உயிரை நோக்குமவன் வந்தான் என்று, மயில்கள் கார்காலத்திலே மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே ஆடுகிறாள். என்று - என்று இப்படிகளைச் சொல்ல. இன மையல்கள் செய்தார் - இப்படிப் பிச்சுகளைப் பண்ணினார். அன்றிக்கே, ‘இப்படிப் பிச்சு ஏற்றிற்று என்று?’ என்னலுமாம். ‘இவள் எனக்கு அடங்கியிருப்பவளாதல் தவிர்ந்த பின்பு இவற்றிற்கெல்லாம் காலம் உண்டோ?’ என்கிறாள். 3‘என் சொல்லும் என் வசமும் அல்லள்’ என்றது எப்போது? இவளை இப்படிப் பிச்சு ஏற்றிற்று எப்போது?’ என்கிறாள் என்றபடி. என்னுடைக் கோமளத்தையே - அதுதான் செய்யும்போது இடம் வேண்டாவோ?’ ‘கலவியும் கூடப் பொறாத மிருதுத் தன்மையையுடையவளைப் பிரிவு பொறுக்கும்படி செய்வதே!’ என்பாள், ‘என்னுடைக் கோமளத்தை’ என்கிறாள்.                      

(4)

_____________________________________________________

1. சீயர் - நஞ்சீயர். யானைக்கூட்டம் - யானையின் கலவி. கதவு இடல் -
  தடையிடுதல்.

2. ‘நன்று’ என்றதன் பொருள், ‘கெட்டு மழை அன்றிக்கே’ என்பது. ‘நாரணன்’
  என்ற பதத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘ஒரு காரணம் இன்றியே உயிரை
  நோக்குமவன்’ என்கிறார்.

3. ‘ஏன்? காலம் இல்லையோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘என் சொல்லும்’ என்று தொடங்கி. இது, திருவாய். 4. 2 : 10.