முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
141

இல

இல்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும் - 1கல் புதைத்துக் கிடக்கும் இடங்களைக் காணில், அவையெல்லாம் பெரிய பெருமாள் பள்ளிகொண்டருளுகிற கோயிலே என்பாள். 2இவற்றிற்கு உள்ளீடு சர்வேசுவரன் ஆகையாலே, இவற்றைக் ‘கரு’ என்கிறது. ‘திசைமுகன் கருவுள் இருந்து படைத்திட்ட கருமங்களும்’ என்பது மறைமொழி. வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்பும் - தெளிவுடையளாய்ப் பந்துக்களைக் கண்டு அஞ்சியிருக்கும் போதோடு அறிவு அழிந்து மோகித்த சமயத்தோடு வாசி அற, இடைவிடாதே கிருஷ்ணன் திருவடிகளையே விரும்பாநிற்பாள். 3‘இது, என்றும் ஒரே தன்மையாய் இருக்கும். மாறாடி வருவது மோஹமும் உணர்த்தியும்; நிலையாயிருப்பது இதுவே. இதனால், பகவானிடத்தில் ஈடுபட்டு இருக்குந்தன்மை இவர்க்கு உயிரோடு சேர்ந்தேயிருப்பது என்றபடி.                    

(8)

374

        விரும்பிப் பகவரைக் காணில்,
            ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
        கரும்பெரு மேகங்கள் காணில்,
            ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
        பெரும்புலம் ஆநிரை காணில்,
            ‘பிரான்உளன்’ என்றுபின் செல்லும்;
        அரும்பெறல் பெண்ணினை மாயோன்
            அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

    பொ-ரை : ‘பகவானுக்கு அடிமைப்பட்ட துறவிகளைக் கண்டால், விரும்பி, ‘அகன்ற உலகத்தை எல்லாம் புசித்த திருமால்’ என்பாள்;

_____________________________________________________

1. மற்றைத் தெய்வங்களின் உருவங்களைக் கண்டால் துச்சமாக
  நினைத்திருப்பவராகையாலே, ‘கல் புதைத்துக் கிடக்கும்’ என்கிறார். ‘அந்தக்
  கல்லிற்கும் இந்தக் கல்லிற்கும் வேறுபாடு கண்டிலேன்’ என்றார் ஒரு
  பெரியார். இந்தக்கல் - அம்மிக்கல்.

2. ‘மற்றைத் தேவர்களைக் ‘கரு’ என்னலாமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இவற்றிற்கு உள்ளீடு’ என்று தொடங்கி. தாம் கூறியதற்கு
  மேற்கோள் காட்டுகிறார், ‘திசைமுகன்’ என்று. இது, திருவாய். 5. 10 : 8.

3. ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்பும்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘இது என்றும்’ என்று தொடங்கி.