முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
143

என

என்னும். வியல் இடம் - அகன்றதாய் உள்ள பூமி. 1‘நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே!’ என்று மயங்கினாற்போலே காணும் அடியார்களைச் சர்வேசுவரனாகக் கொண்டு மயங்குகின்றதாகிய இதுவும். கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் - கறுத்துப் பெருத்துச் சிரமத்தைப் போக்கக்கூடியதான மேகத்தைக் கண்டவாறே, அவ்வடிவையுடைய கிருஷ்ணன் என்று, பறப்பாரைப்போலே இருக்கப் பரபரப்போடு நிற்பாள். 2மேகத்தைக் கண்ட அளவில் சிறகு எழும்போலே காணும். 3மேகத்தைக் கண்டவாறே ஒரு பக்ஷபாதம் உண்டாகக் கூடியதன்றோ?’ 4இராஜேந்திர சோழன் என்ற ஊரிலே திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார் காலத்தில் பயிர் பார்க்க என்று புறப்பட்டு மேகத்தைக் கண்டவாறே மோஹித்து

_____________________________________________________

1. ‘அடிமையாயுள்ள பகவரை இறைவனாகக் கூறலாமோ?’ என்னும் வினாவினைத்
  திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நின்ற குன்றத்தினை’
  என்று தொடங்கி. என்றது, ‘அசித்துக்கும் ஈசுவரனுக்கும் பேதமுண்டாயிருக்கச்
  செய்தேயும் ஐக்கியம் கூறியது மயக்கத்தின் காரியமானாற்போன்று, இதுவும்
  மயக்கத்தின் காரியம்’ என்றபடி.

2. ‘பறக்கும்போது சிறகு வேண்டாவோ?’ என்னும் வினாவிற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘மேகத்தை’ என்று தொடங்கி.

3. ‘பறக்கும் என்றதற்கு ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘மேகத்தைக்
  கண்டவாறே’ என்று தொடங்கி. பக்ஷபாதம் - சிலேடை.

4. மேகத்தைக் கண்டதும் கிருஷ்ணனாக மயங்கியதற்கு ஓர் ஐதிஹ்யம்
  அருளிச்செய்கிறார், ‘இராஜேந்திரசோழன்’ என்று தொடங்கி.

  ‘குவலையஞ் சூழ்கடல் காயா மரகதங் கொண்டல்நெய்தல்
  குவலையங் கண்டன்பர் நைவரென் றால்கொற்ற வாணற்குவா
  குவலைய நேமிதொட் டாயரங் கா!கொடும் பல்பிறப்பா
  குவலையங் கற்றுனைக் காணில்என் னாங்கொல் குறிப்பவர்க்கே?’

  என்ற திவ்வியகவியின் திருப்பாசுரம், இங்கு அநுசந்திக்கத்தகும்.

  ‘வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
  பொய்யோஎனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
  மய்யோமர கதமோமறி கடலோமழை முகிலோ
  அய்யோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்’

  என்ற கம்பநாட்டாழ்வார் திருவாக்கும் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.