முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
15

தான் நினைத்திருக்கும் இத்தனை என்பதாம். 1‘தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே, ‘பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ? ‘இவன் இப்படித் தொழ, அவன் செய்தது என்? என்னில்,

    இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் - ‘இன்ன அரசன் காணப் புகுகிறான்’ என்று ஓலக்கம் இருந்து, நாடகச்சாலையில் உள்ளாரை அழைத்து அருளப் பாடிட்டு, நாட்டில் மரங்களை அடையத் தொளைத்துத் 2தோலை மேவி அதனை இடியைப் போன்று ஒலிக்கச் செய்து விருப்பு இன்றியே இருப்பான். ‘இன்னான் வந்து காலில் விழுந்து கிடந்தான்; அவன் இதனை விரும்பாமல் கூத்துக் காண்பது பாட்டுக் கேட்பது ஆனான் என்று உலகத்திலே பிரசித்தமாக வேண்டும்’ என்று ஆயிற்று இவன் இருப்பது. 3அங்கு நிற்கின்ற தூணைக் காட்டிலும் ஒரு வாசி இல்லை காணும் இவருடைய நினைவால்: ஆதலின், ‘இருந்தவர்’ என்கிறார். ‘இப்படி இருந்தவர்கள் என் ஆவர்?’ என்றால், பொடிபடுவர் என்கிறார் மேல் : பொடி சேர் துகளாய்ப் போவர்கள் - ‘தனக்கு’ என்று ஓர் தன்மை இன்றிக்கே ‘பொடியோடே சேர்ந்த தூளி என்று வேறு ஒன்றனோடே சேர்த்து நிரூபிக்க வேண்டும்படி ஆவர்கள். என்றது, ‘தம் காலிலே ஒருவன் குனிந்தால் அநாதரிக்கும்படியான

_____________________________________________________

1. தொழுகின்றவன் ஆதரத்தோடு தொழ, தொழப்படுகின்றவன் குணஹீநன்
  ஆகையாலே அநாதரித்திருக்கின்றான் என்பதனை உதாரண முகத்தாலே
  விளக்குகிறார். ‘தலையாலே யாசித்த’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யு.
  24 : 19.

      ‘எந்தப் பரதாழ்வான் என்னை மீட்டு அழைத்துக்கொண்டு போகச்
  சித்திரக்கூட மலையை அடைந்தான்? அடைந்து தலையாலே என்னை
  வணங்கினான்? வணங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தை என்னால்
  செய்யப்படவில்லை,’ என்பது அச்சுலோகத்தின் பொருள்.
 
வியாக்கியானத்தில் ‘பிள்ளை’ என்றது, பரதாழ்வானை. தலை சீய்க்கும்
  இறைவன் - ஸ்ரீராமபிரான். தலை சீய்த்தல் - துன்புறுதல்.
 

2. தோலை மேவி - தோலைக் கட்டி.

3. ‘இருந்தவர்’ என்பதற்கு வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘அங்கு நிற்கிற’ என்று
  தொடங்கும் வாக்கியம். இவருடைய - ஆழ்வாருடைய.