முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
153

1

    1‘நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வானமாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்; ‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு, ‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்; ‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு, ‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்; ‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக்கொடுத்தான்; ‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு, ‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்தமயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்; பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.

377

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்
ஆற்றல்மிக்கு ஆளும் அம் மானைவெம் மாபிளந் தான்றனைப்
போற்றிஎன் றேகைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்றநோற் றேற்குஇனி என்ன குறைஎழு மையுமே?

    பொ-ரை : ‘வேறுபாடு தோன்ற இருந்து ஏழுலகங்களிலும் ஒரே கோல் செல்லும்படியாகப் பொறுமை மிகுந்து ஆளுகின்ற அழிதலில்லாத கல்யாண குணங்களையுடைய அம்மானும், கொடிய கேசி என்னும் அசுரனது வாயைப் பிளந்தவனுமான சர்வேசுவரனைப் ‘போற்றி போற்றி’ என்று சொல்லிக்கொண்டே கைகள் வயிறு நிறையும்படி தொழுது சொற்களாலாகிய மாலைகளை அவன் தலைமேல் தாங்கும்படி பாட வல்ல புண்ணியத்தையுடைய எனக்கு இனி ஏழேழ்படிகாலான பிறவிகள் வரக்கூடியனவாக இருந்தாலும், என்ன குறை இருக்கின்றது? ஒரு குறையும் இன்று,’ என்றவாறு.

_____________________________________________________

1. மேலே ‘போலி கண்டு இவர் மயங்கின இழவெல்லாம் போகும்படி’
  என்றதனை விரித்து விளக்குகிறார், ‘நின்ற குன்றத்தினை’ என்று தொடங்கி.