முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
157

ஆளுக

ஆளுகின்ற அம்மான்’ என்கிறார். என்றது, 1வழி அல்லா வழியே வந்த ஐசுவரியமுடையவன் பிறர்க்குத் திரிய ஒண்ணாதபடி நடப்பான் என்பதனையும், உடையவனுடைய ஐசுவரியமாகையாலே தகுதியாய் இருக்கின்றமையையும் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்றது, வலியாய், ‘இவ்வுலகமனைத்தையும் நிர்வஹிக்கைக்கு அடியான தரிக்கும் ஆற்றலைச் சொல்லுகிறது’ என்று சொல்லுவாரும் உளர். இனி, ‘அம்மான்’ என்பதற்கு, ‘எல்லாரையும் நியமிக்கின்ற தன்மையால் வந்த ஐசுவரியத்தையுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

    வெம் மா பிளந்தான் தன்னை - ‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், இவ்வுலகங்கள் அனைத்தையம் உடையவன் ஆனால், இருந்த இடத்தே இருந்து, ‘தஹபச - கொளுத்து அடு’ என்று  நிர்வஹிக்கையன்றிக்கே, இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து, களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது என்றபடி. 2சமந்தக மணி முதலியவைகளிலே பரிபவம் பிரசித்தம்; ‘நான் ‘பந்துக்களுக்கு இரட்சகன்’ என்பது ஒரு பெயர் மாத்திரமேயாய், இவர்களுக்கு அடிமை வேலைகளையே செய்துகொண்டு திரிகின்றேன்,’ என்றும், ‘நல்ல பொருள்களை அனுபவிக்கும் அனுபவங்களில் பாதியைப் பகுத்திட்டு வாழ்ந்து போந்தேன்; இவர்கள் கூறுகின்ற கொடிய வார்த்தைகளையெல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றும் அவன் தானும் அருளிச் செய்தான்.

_____________________________________________________

1. ‘ஆற்றல் மிக்கு ஆளுதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘வழியல்லா வழியே’ என்று தொடங்கி. இது, ‘அம்மான்’
  என்றதன் பொருளை விரித்தபடி. இங்குப் புற நானூறு 75ஆம் செய். காண்க.

2. அவர்கள் பரிபவங்களைச் செய்வதற்கும், இவன் அவற்றைப்
  பொறுத்துக்கொண்டு களை பிடுங்கிக் காத்தற்கும் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘சமந்தக மணி’ என்று தொடங்கி. ‘நான் பந்துக்களுக்கு’ என்று தொடங்கும்
  பொருளையுடைய சுலோகம், பாரதம். இங்குத் திருவாய்மொழி, மூன்றாம்
  பத்து, ஈட்டின் தமிழாக்கம், 17ஆம் பக்கம் காண்க.