முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
166

என

என்னை உனக்கு முன் தொண்டாக, மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப், பாட்டினால் உன்னை என் நெஞ்சத் திருந்தமை காட்டினாய், கண்ணபுரத்து உறை அம்மானே!’ என்கிறபடியே, இவர் வாக்குக் கவி பாட, இவர்தாம் நம்மைப் போன்று சொல்லினாரித்தனை என்றபடி.

    வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய - ‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. 1இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படியாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது. அன்றிக்கே, 2பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக்கொள்ளுகையன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும் தம்மைப்போலேயாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல். அங்ஙனம் அன்றிக்கே, ‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே, தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத்திருவாய்மொழியை அருளிச்செய்கிறது பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச்செய்வர். 3பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி. வியன் ஞாலம் - ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல். 

(2)

_____________________________________________________

1. ‘இவ்வுலகத்தில் இருக்கச்செய்தே வினைகள் வீயக்கூடுமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இவ்வுலகத்திலே’ என்று தொடங்கி.

2. இரண்டாவது பொருளில், ‘வியன் ஞாலத்து வீய’ என்பதற்கு
  ‘வியன்ஞாலத்திலே உள்ளவர்களுடைய பாவங்கள் அழியும்படியாக’ என்று
  பொருள் கொள்க. ஞாலம் என்றது, ஆகுபெயர்.

3. ‘இங்கே இருக்கச்செய்தே, அங்குற்றாராகச் சொல்லக் கூடுமோ?’ என்னும்
  வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பாவனையின் மிகுதியாலே’ என்று
  தொடங்கி. ‘வியன்ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம்போலே
  அருளிச்செய்கையாலே, பாவனையின் மிகுதியாலே தாம் பரமபதத்திலே
  இருக்கின்றாராய், இந்த உலகத்தில் தம்முடைய சம்பந்தமுடையவர்களுடைய
  பாவங்கள் அழியும்படி பாடினேன் என்கிறார் என்பது கருத்து.