முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
169

காலம்’ என்கிறார். 1‘ஒழிவில் காலமெல்லாம் என்ன வேண்டியிருக்கும்’ என்றபடி. இசை மாலைகள் - 2‘கருமுகை மாலை’ என்னுமாறு போன்று இசையாலே செய்த மாலை. வாசிகமான அடிமை அன்றோ செய்கின்றது? ஏத்தி மேவப் பெற்றேன் - ஏத்திக்கொண்டு 3கிட்டப் பெற்றேன். ‘இதனால் பலித்தது என்?’ என்னில், வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் - நித்தியமாம் எல்லை இல்லாததான ஆனந்தத்தையுடையேன் ஆனேன்.

    ‘சர்வேசுவரனுடைய ஆனந்தத்தையும் உம்முடைய ஆனந்தத்தையும் ஒன்றாகச் சொன்னீர்; பின்னை உமக்கு வேற்றுமை என்?’ என்னில், ‘வேற்றுமை எனக்குச் சிறிது உண்டு,’ என்கிறார் மேல் : மேவி - அவனுக்கு இயல்பிலே அமைந்தது; எனக்கு அவனை அடைந்த காரணத்தால் வந்தது; அவனுடைய ஆனந்தத்திற்கு அடி இல்லை; என்னுடைய ஆனந்தத்திற்கு அடி உண்டு. என்றது, 4‘இந்தப் பரமாத்துமா தானே ஆனந்தத்தைக் கொடுக்கிறான், ‘ என்கிற ஏற்றம் உண்டு எனக்கு; அவனுக்குத் தான் தோன்றி என்றபடி.

(3)

380

மேவிநின் றுதொழு வார்வினை போகமே வும்பிரான்
தூவிஅம் புள்ளுடை யான்அடல் ஆழிஅம் மான்றனை
நாவிய லால்இசை மாலைகள் ஏத்திநண் ணப்பெற்றேன்;
ஆவிஎன் ஆவியை யான்அறி யேன்செய்த ஆற்றையே.

    பொ-ரை : ‘வேறு பயன் ஒன்றையும் கருதாது பொருந்தி நின்று தொழுகின்ற அடியார்களுடைய பாவங்கள் போகும்படி அவர்களோடு சேர்கின்ற உபகாரகனும், சிறகையுடைய அழகு பொருந்திய கருடப்பறவையை வாகனமாக உடையவனும், பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த தலைவனுமான சர்வேசுவரனை, நாவின் தொழிலாலே இசை மாலைகளைக்கொண்டு ஏத்திக் கிட்டப் பெற்றேன்; பரமாத்துமாவான சர்வேசுவரன் என் ஆத்துமாவைச் செய்த தன்மையினை யான் அறியமாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.

_____________________________________________________

1. திருவாய்மொழி,  3. 3 : 1.

2. ‘கருமுகை மாலை’ என்றது, ‘வேறு மலர்கள் கலவாமல், கருமுகை
  மலர்களாலேயே கட்டப்பட்ட மாலை’ என்றபடி.

3. கிட்டப்பெற்றேன் : கிட்டுதல் - மானச அனுபவத்தின் தெளிவு.

4. இதனால், ஸ்வார்ஜிதம் போலே அவனுடைய ஆனந்தம்; பிதிரார்ஜிதம்
  போலே தம்முடைய ஆனந்தம் என்கிறாராயிற்று.