முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
17

பாகவதர்களுக்கு எஜமானன் அலன் என்று காதின் அடியில் சொன்னான் அல்லவா?’ என்கிறபடியே, யமன் முதலானோர் அஞ்சும்படியான மதிப்பைப் பெறுவர்,’ என்றபடி.

(3)

336

நினைப்பான் புகின் 1கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்குஅற மாய்தல்அல் லால்மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ.

    பொ-ரை : ‘நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கலிலே உள்ள நுண்மையான மணல்களைக்காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றனையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற கிருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கள்,’ என்றவாறு.

    வி-கு : ‘நினைப்பான் - வினையெச்சம். எக்கல் - மணல் மேடு. ‘ஆண்டு கழிந்தவர் பலர்’ என்க. மனைப்பால் - மனை இடம்.

    ஈடு : நாலாம் பாட்டு. 2‘செல்வத்தின் நிலையாமையும் மதிப்பு அறுகையும் கிடக்கச்செய்தே, இன்பத்தை அனுபவிக்கின்றவர்களுடைய நிலையாமையாலும் அவனைப் பற்றவேண்டும்,’ என்கிறார்.

_____________________________________________________

1. ‘திரையிடு மணலினும் பலரே யுரைசெல
  மலர்தலை யுலக மாண்டுகழிந் தோரே.’  

(மதுரைக். 236. 7.)

  ‘தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
  நெடுவரை இழிதரும் நீத்தஞ்சால் அருவிக்
  கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று
  வடுவாழ் எக்கர் மணலினும் பலரே.’

(மலைபடு. 553-6.)

  இன்னும், சிலப்பதிகாரம் நடுகற்காதையில் 133-150 அடிகளிற் கூறப்படும்
  பகுதிகளையும் ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.

2. மேலே கூறிய மூன்று பாசுரங்களின் பொருளையும் அநுவதித்துக்கொண்டு,
  ‘இவ்வுலகு
ஆண்டு கழிந்தவர், மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,’
  என்றதிலே நோக்காக அவதாரிகை அருளிச்செய்கிறார்.