முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
18

    நினைப்பான் புகின் - நினைக்கப்புக்கால். ‘புகின்’ என்றதனால், 1கடலிலே இழிவாரைப்போல, நினைத்ததாய்த் தலைக்கட்ட ஒண்ணாதபடியாய் இருக்கிற இருப்பும், தாம் உலக வாழ்வினை நினையார் என்னுமிடமும் தோற்றுகின்றன. ‘ஆயின், இப்பொழுது நினைக்கிறது என்?’ எனின், ஆனாலும், 2பிறருடைய நலத்திற்காக நினைக்குமது உண்டே அன்றோ? கடல் எக்கலில் நுண்மணலின் பலர் - அலைவாய் எக்கலில் நுண்ணிய மணலிற்காட்டில் பலர் ஆவார். ‘இப்படியாண்டு முடிந்து போகிறவர்கள்தாம் யார்?’ என்னில், ‘சிறிய மனிதர்கள் அல்லர்; 3‘பிரமாவினுடைய ஒரு பகலை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் ஓர் இரவை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் அறிகிறார்கள்,’ என்கிறபடியே, 4ஆயிரம் சதுர்யுகம் கூடியது ஒரு பகலாய், இப்படி இராத்திரியாய், இங்ஙனம் நூறு ஆண்டு இருந்து துவிபரார்த்தகாலம் உயிர் வாழ்ந்து முடிந்து போகும் பிரமன் முதலானோர்’ என்கிறார் மேல்; எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர் - பல யுகங்களும் இவ்வுலகையாண்டு, 5இது குறியழியாதே இருக்க, இதனை ‘என்னது’ என்று அபிமானித்து முடிந்து போனவர்கள். ‘கழிந்தவர் கடல் எக்கலில் நுண் மணலின் பலர்,’ எனக்

_____________________________________________________

1. ‘கடலிலே இழிவாரைப் போலே’ என்றது, ‘கடலிலே இழிவார் நீந்தித்
  தலைக்கட்ட ஒண்ணாதாப்போலே’ என்றபடி.

2. ‘வம்மின் புலவீர்!’ என்ற பாசுர வியாக்கியானம் பார்க்க. 3. 9 : 6.

3. ஸ்ரீ கீதை.  8 : 17. 

4. 15 நிமிஷம் ஒரு காஷ்டை; 30 காஷ்டை ஒரு கலை; 30 கலை ஒரு
  முகூர்த்தம்; 30 முகூர்த்தம் ஒரு நாள்; 15 நாள் ஒரு பக்ஷம்; 2 பக்ஷம் ஒரு
  மாதம்; 2 மாதம் ஒரு ருது; 2 ருது ஓர் அயனம்; 2 அயனம் ஒரு வருஷம்;
  இப்படி மனித வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருஷம்; தேவ வருஷம்
  12000 கொண்டது ஒரு சதுர் யுகம்; 71 சதுர் யுகம் ஒரு மந்வந்தரம்; 14
  மந்வந்தரம் ஆயிரம் சதுர்யுகம்; இது பிரமனுக்கு ஒரு பகல்; இரண்டாயிரம்
  சதுர்யுகம் பிரமனுக்கு ஒரு நாள். இந்த நாள்களால் மாதங்களையும்,
  மாதங்களால் வருஷங்களையும் பெருக்கி, அதனால் வருகின்ற வருஷம் நூறு
  ஆனால், பிரமனுடைய ஆயுள் முடிவாகும் என்பர்.

5. ‘இது குறியழியாதே இருக்க’ என்றது, ‘கழிந்தவர்’ என்றதற்கு பாவம்.
  உலகம், பிரவாஹ ரூபேண நித்தியமாகையைப் பற்றிக் ‘குறியழியாதே’
  என்கிறார்.