முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
181

    வி-கு : தன்தனக்கு - தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு. ‘நன்று பெரிதாகும்’ என்பது தொல்காப்பியம். விதி - பகவானுடைய திருவருள். ‘நமக்கு என்ன குறை?’ என மாறுக.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1“அரியது உண்டோ எனக்கு?’ என்கிற இந்த நிறைவு உமக்கு எத்தாலே வந்தது?’ என்ன ‘பகவானுடைய கிருபையாலே வந்தது,’ என்கிறார்.

    என்றும் - எல்லாக்காலமும். ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன்தனக்கு இன்றி நின்றானை - 2‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சமானமான பொருளும் மேலான பொருளும் காணப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே, 3எல்லாம் கூடின கூட்டத்துக்கு ஒப்பு இல்லாமையே அன்றிக்கே, ஒரோ வகைக்கும் ஓர் ஒப்பு இன்றிக்கே இருப்பவனை. 4‘அவனுக்குச் சரீரமாக இருப்பதனாலே, ஒத்தாராயும் மிக்காராயும் இருப்பாரை இன்றிக்கே இருப்பவனை’ என்றபடி. 5‘தன்தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன்தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; 6‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’

_____________________________________________________

1. ‘சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம்’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. சுவேதாஸ்வதரம்.

3. ‘ஒன்றாகி’ என்று விசேடித்ததற்குக் கருத்து, ‘எல்லாங்கூடின கூட்டத்துக்கு’
  என்பது. ‘ஒரோ வகைக்கும்’ என்றது, ‘சொரூப குணம் முதலானவைகளிலே
  ஒரோ வகைக்கும்’ என்றபடி.

4. ‘ஒன்றாகி’ என்கிறவிடத்திலே தோன்றுகிற ஐக்கியபக்ஷத்தை நீக்குகிறார்,
  ‘அவனுக்குச் சரீரமாக’ என்று தொடங்கி.

5. ‘தனக்கு’ என்னாது, ‘தன்தனக்கு’ என்றதற்குக் கருத்து யாது?’ என்ன,
  ‘எம்பெருமானார்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ஸ்ரீ
  வைஷ்ணவர் சிலர் கேட்க, சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை
  என்றபடி. தன்தனக்கு - அவதரித்து அடியார்க்குப் பரதந்திரனாயிருக்கிற
  தனக்கு. தன் தனக்கு - தானான தனக்கு; தானான தன்மையாவது,
  தனக்கேயுரிய ஆகாரம்; அதாவது, ‘ஆஸ்ரித பாரதந்திரியம்’ என்றபடி.

6. ஸ்ரீ ராமா. யுத். 120 : 11. மனிச்சு - மனிதத்தன்மை.